Published : 03 Apr 2015 04:19 PM
Last Updated : 03 Apr 2015 04:19 PM
மத்தியில் மோடியின் ஆட்சி 10-ல் இருந்து 20 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், இல்லாத குற்றங்களை தேடுவதைவிட தங்கள் கட்சியின் தலைவரையே காங்கிரஸ் தேட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பாஜக தேசிய செயற்குழு கூட்டம் 5-வது முறையாக பெங்களூருவில் உள்ள லலித் அசோக் ஓட்டலில் இன்று காலை தொடங்கியது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, எல்.கே.அத்வானி உட்பட தேசிய செயற்குழு உறுப்பினர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், பாஜக மாநில தலைவர்கள் என 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, "நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் இல்லாத குற்றங்களை கண்டுபிடிக்க முயற்சி செய்வதை விட்டுவிட்டு தங்கள் கட்சித் தலைவரைத் தேடுவதில் காங்கிரஸ் கவனம் செலுத்தலாம்" என்றார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அண்மைக்காலமாக கட்சி நடவடிக்கைகளில் ஒதுங்கி எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் உள்ள நிலையில், அவரை நேரடியாகச் சுட்டிக் காட்டாமல் அமித் ஷா இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் பேசும்போது, "நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாய நலனுக்கு எதிரானது அல்ல. பாஜக விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறது. எதிர்க்கட்சியினர், திட்டமிட்டே நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்துக்கு எதிராக வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால் நாங்கள் விவசாயிகளிடம் உண்மையை எடுத்துரைப்போம்.
பாஜக விவசாயிகளின் நண்பன். விவசாயிகள்தான் எங்களுக்கு பெருமளவில் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்துள்ளனர். எனவே, விவசாயிகள் மத்தியில் பாஜக குறித்து தவறான பிரச்சாரத்தை காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டாம்.
காங்கிரஸ் கட்சி தன்னம்ப்பிக்கை இழந்து, திக்கு தெரியாமல் தவிக்கிறது. அதனால்தான் இல்லாத குற்றங்களை தேடுகிறது. அவர்கள் ஏதாவது தேடியே ஆக வேண்டும் என விரும்பினால், அவர்களுடைய தலைவரைத் தேடலாமே" என்றார் அமித் ஷா.
'
மோடியின் ஆட்சி 10-20 ஆண்டுகளுக்கு நீடிக்கும்'
"மோடி அரசு வந்து விட்டது. இனி அடுத்த 10-20 ஆண்டுகளுக்கு அதிகாரத்தில் இருப்பது உறுதி. பிரதமர் நரேந்திர மோடி புதிய அரசியல் கலாச்சாரத்தையும் புதிய சூழலையும் உருவாக்கியுள்ளார். முன்பு நிலவிய கொள்கை முடக்கம் முடிந்து விட்டது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டுகால ஊழல் ஆட்சியை பாஜக முடிவுக்கு கொண்டு வந்தது. இப்போது ஊழல் என்றே பேச்சுக்கே இடமில்லை” என்றார் அமித் ஷா.
பிஹார் நிலவரம் குறித்து...
"கடந்த முறை பிஹார் மக்கள் பாஜக-ஐக்கிய ஜனதா தள கூட்டணிக்கு வாக்களித்தனர். ஆனால் மக்களின் முடிவை தூக்கி எறிந்து கூட்டணியிலிருந்து தற்போது பிரிந்து சென்றுள்ளனர். எனவே மக்களை ஏமாற்றியது நாங்கள் அல்ல அவர்கள்தான்.
தற்போது பிஹாரில் நடைபெறுவது ‘இரண்டாம் காட்டு தர்பார்’ இதனால்தான் பிஹார் மக்கள் கடும் கோபமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்” என்றார் அமித் ஷா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT