Published : 20 Mar 2014 12:00 AM
Last Updated : 20 Mar 2014 12:00 AM
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து குஜராத்தில் 2002ல் நடந்த கலவரம் தொடர்பான வழக்கிலிருந்து பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக பாஜக தலைவர்கள் கூறுவதை ஆட்சேபித்துள்ளார் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்.
இது தொடர்பாக நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:
மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மோடிக்கு சம்மன் அனுப்பவில்லை. இது உண்மைதான். நல்ல கிரேடுடன் நர்சரி பள்ளி மாணவன் வெளியே வந்துள்ளது போலத்தான் இது. அந்த கிரேடை கொண்டு தான் முனைவர் பட்டம் பெற்றுவிட்டேன் எனக் கூறி திரிவது போல இது இருக்கிறது.
மோடி முதல்வராக இருந்த போதுதான் குஜராத் கலவரம் நடந்தது. இந்த வழக்கில் 170 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக் கப்பட்டுள்ளது என்றார் சல்மான். விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே மோடியை ஊழல் புரியாதவர் என்று நற்சான்று கொடுத்தது பற்றி ஏற்பட்டுள்ள சர்ச்சை பற்றி கேட்டதற்கு குர்ஷித் கூறியதாவது:
தன்னைப் பற்றி மிகுந்த நம் பிக்கை வைத்துள்ளவர்கள் தமது மேன்மையை நிலைநாட்ட பிறரது ஆதரவை கோரி அலைவது ஏன் என்பது தெரியவில்லை. மறுப்பு வரும்போது விக்கிலீக்ஸின் சான்று தமக்கு தேவையில்லை என கூறுகிறார்கள். இது என்னை மிரள வைக்கிறது என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிடிஐக்கு அளித்த பேட்டியில் குஜராத் கலவரத்தின்போது ஆட்சி நிர்வாகம் என்ற ஒன்றே காணாமல் போனது. கடமையை தட்டிக்கழித்த மன்னிக்க முடியாத இந்த செயலுக்கு சட்டப்படி முழு பொறுப்பை மோடிதான் ஏற்க வேண்டும் என்று ராகுல் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சல்மானும் ராகுல் வழியில் பேசி விமர்சித்துள்ளார்.
மோடியை இந்த வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்துள்ளதாக பாஜகவினர் பேசுவது அரசியல் ஆதாயத்துக்குத்தான். வழக்கி லிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூற தகுந்த நேரம் அல்ல இது. இன்னும் பல கட்டங் களை தாண்டிய பிறகே இவ்வாறு சொல்லலாம் என்றார் சல்மான் குர்ஷித். இது பற்றி பாஜக தலைவர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:
சல்மான் குர்ஷித் சொல்வது முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டியதாகும். அவர் நீதி மன்றத்தை இழிவுபடுத்துகிறார். நீதிமன்றத்தில் சிறியது பெரியது என என்ன வித்தியாசம் இருக்கிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது, நீதிமன்றம்தான் மோடியை விடுவித்திருக்கிறது.
உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழுதான் கல வரத்தில் மோடிக்கு தொடர்பில்லை என கூறி அவரை விடுவித்தது. இருப்பினும் 2002 கலவரத்தை மீண்டும் எழுப்புகிறார்கள் என்றார் ஜவடேகர்.-பி.டி.ஐ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT