Published : 08 Nov 2013 08:01 PM
Last Updated : 08 Nov 2013 08:01 PM
தேச நலன் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இலங்கையில் அடுத்த வாரம் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பரா, புறக்கணிப்பாரா என்பதற்கு இறுதி முடிவெடுக்கும் நோக்கத்தில் டெல்லியில் இன்று காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்தக் கூட்டத்தில், இறுதி முடிவை எட்ட முடியாமல் குழப்பம் நீடித்ததாகத் தெரிகிறது.
இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, "இங்கையில் உள்ள தமிழ் மக்களின் நலனை மனத்தில்கொண்டு இறுதி முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் மற்றும் மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு அளிக்கப்படும். மேலும், தேச நலன் மற்றும் இலங்கையில் தமிழ் மக்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட முதல்வரின் கருத்துகளும் கவனத்தில்கொள்ளப்படும்" என்றார்.
மேலும், இந்தியாவில் உள்ள தமிழ் மக்களுக்கு, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் கவலைக்குரிய விஷயமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
வெளியுறவுக் கொள்கையின் அடைப்படியில் முடிவு எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, "தேச நலன்தான் அளவீடு. அதுதான் எல்லாவற்றுக்கும் மேலானது. அதையொட்டியே பிரதமர் முடிவெடுப்பார்" என்றார் அவர்.
இதனிடையே, காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி, பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளன.
மத்திய சுற்றுசூழல் அமைச்சர் ஜெயந்தி நடரஜன், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோர், காமன்ல்வெத் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.
அதேவேளையில், சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு வெளியுறவுக் கொள்கை பாதிக்காத வகையில் பிரதமர் இலங்கைப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் மத்தியில் ஒரு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக, இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெயரளவிற்குக் கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று திமுக தொடக்கத்தில் இருந்தே குரல் கொடுத்து வரும் நிலையில், பிரதமர் பங்கேற்கக் கூடாது என்று இன்றும் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தியது கவனத்துக்குரியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT