Published : 21 Jun 2016 09:03 AM
Last Updated : 21 Jun 2016 09:03 AM

சித்தூர் நீதிமன்றத்தில் குண்டு வைத்தது அல்காய்தாவா? - போலீஸாருக்கு மிரட்டல் கடிதம்

ஆந்திர மாநிலம் சித்தூர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் குண்டு வெடித்தது. இது தொடர்பாக தற்போது சித்தூர் போலீஸாருக்கு அல்காய்தா தீவிரவாத அமைப்பு சார்பில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி குண்டு வெடித்தது. இதில் நீதிமன்ற ஊழியர் ஒருவர் படுகாயமடைந்தார். 3 வாகனங்கள் சேதமடைந்தன.

இந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்குப் பிறகு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட நீதிமன்றத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வெடிகுண்டு வெடித்தது. இதிலும் ஒருவர் படுகாயமடைந்தார். வாகனங்கள் சேதமடைந்தன.

இந்த இரு சம்பவங்களும் ஒரு வாரத்திற்குள், ஒரே மாதிரி நடந்துள்ளதால், ஆந்திர போலீஸார் 40 பேர் கொண்ட குழு கேரளா சென்று ஆய்வு செய்தது. அதே போன்று, கேரள போலீஸாரும் சித்தூருக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்லேடன் புகைப்படம்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், அல் காய்தா தீவிரவாத அமைப்பு சார்பில் சித்தூர் மாவட்ட எஸ்.பி.க்கு ஒரு மர்ம கடிதம் வந்துள்ளது. இந்த கடிதத்தில் பின்லேடன் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. அதன் கீழே, “தி டேஸ் மூவ்மெண்ட்டின் ஒரு பகுதியாக, சித்தூரில் உள்ள நீதிமன்றத்தில் குண்டு வைத்தது நாங்கள்தான். இதேபோன்று விரைவில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைத்து நாசவேலையில் ஈடுபடுவோம்” என குறிப்பிட்டுள்ளது.

இந்த கடிதம் குறித்து தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கடிதம் தீவிரவாத எதிர்ப்பு அமைப்புக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. மூன்று ஆண்டு களுக்கு முன்னர், சித்தூர் மாவட்டம், புத்தூரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 3 தீவிரவாதி களை ஆந்திர, தமிழக போலீஸார் கூட்டு நடவடிக்கை மூலம் உயிரோடு பிடித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x