Published : 12 Jul 2016 03:14 PM
Last Updated : 12 Jul 2016 03:14 PM
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நடந்த வன்முறைச் சம்பவங்கள் கவலை அளிப்பதாக தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி புர்ஹான் வானி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து காஷ்மீரில் கடந்த 9-ம் தேதியில் இருந்து வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
4-வது நாளாக நேற்றும் போராட்டம் தொடந்து நடந்தது. புல்வாமா மாவட்டம் ரோமுவில் உள்ள ஒரு காவல் சோதனைச் சாவடியை ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று தீயிட்டு கொளுத்தினர். குப்வாரா மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார். இதன் காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் 4-வது நாளாக நேற்றும் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வன்முறையாளர்களை ஒடுக்கு வதற்காக பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் இதுவரை 33 பேர் பலியாகி உள்ளனர். இதுதவிர ஒரு போலீஸ்காரரும் பலியானார். 1,400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், காஷ்மீர் நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், மனோகர் பாரிக்கர், பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளி யுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் நிலவரம் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு இணையமைச்சர் ஜிதேந்திர சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஷ்மீர் விவகாரம் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப் பட்டது. அப்போது, அங்கு கடந்த சில தினங்களாக நடந்த வன்முறை சம்பவங்கள் கவலை அளிப்பதாக தெரிவித்த பிரதமர், அதைக் கட்டுப் படுத்துவதற்கான வழிமுறைகளையும் தெரிவித்தார். மேலும் அங்குள்ள மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அங்கு இயல்புநிலை திரும்பும் என்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்பாவி மக்களுக்கு எவ்வித இடையூறோ, இழப்போ ஏற்படாது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் திருப்தி அளிப்பதாக தெரிவித்த பிரதமர், மாநில அரசு கேட்கும் எத்தகைய உதவியையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறினார்.
ராஜ்நாத்துடன் இமாம்கள் சந்திப்பு
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை டெல்லி இமாம்கள் குழுவினர் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து ஆலோசித் தனர்.
இதுகுறித்து அனைத்து இந்திய இமாம்கள் அமைப்பைச் சேர்ந்த உமர் அகமது கூறும்போது, “உள்துறை அமைச்சருடன் காஷ்மீர் விவகாரம் குறித்து விரிவாக பேசினோம். அங்கு அமைதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தினோம். தீவிரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
மெகபூபா வேண்டுகோள்
காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி நேற்று கூறும்போது, “மாநிலத் தில் அமைதி திரும்புவதற்கும் வன்முறையால் உயிரிழப்பு ஏற்படு வதைத் தடுக்கவும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். அமைச்சர் களும் தங்கள் மாவட்ட தலைநகரங் களில் இருந்து நிலைமையை கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT