Published : 14 Jul 2016 06:53 PM
Last Updated : 14 Jul 2016 06:53 PM
தேசிய மருத்துவ நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விலக்கு அளித்து மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், அவசர சட்டத்துக்கு தடை விதிக்க மறுத்துள்ளது.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு ஒரே நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று கடந்த மே 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதிலிருந்து விதிவிலக்கு கோரி மாநில அரசுகள் தாக்கல் செய்த மனுவையும் உச்ச நீதி மன்றம் நிராகரித்து உத்தர விட்டது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்த கல்வியாண்டு மட்டும் விலக்கு அளிக்கும் வகை யில் கடந்த மே 24-ம் தேதி அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்தை எதிர்த்து சமூக ஆர்வலர் ஆனந்த் ராய் மற்றும் சங்கல்ப் அறக்கட்டளை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு நீதிபதிகள் அனில் தவே, சிவகீர்த்தி சிங், ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமரேந்திர சரண், 'தேசிய நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அதை மீறும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தைவிட உயர்ந்த அமைப்பைப் போன்று மத்திய அரசு செயல்பட்டுள்ளது. இதை அனுமதித்தால், அடுத்து வரும் அரசுகளும் இதே நடைமுறையை பின்பற்றும். எனவே, அவசர சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்' என்று வாதிட்டார்.
தேர்வையே ரத்து செய்திருப்போம்
அப்போது, அவசர சட்டம் கொண்டு வந்துள்ள மத்திய அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது தேவையற்ற செயல். அவசர சட்டம் செல்லுமா என்பது சந்தேகத்துக்குரியது என்றும் தெரிவித்தனர். மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, 'உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீற வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல. அப்படி நினைத்திருந்தால், தேசிய நுழைவுத்தேர்வையே ரத்து செய்திருக்க முடியும்.
சில மாநிலங்கள் விதிவிலக்கு கோரியதால், இந்த ஆண்டு மட்டும் விருப்பமுள்ள மாநிலங்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள் ளது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவ மாணவர் சேர்க்கையே முடிந்துவிட்டது. சில மாநிலங்களில் அவர்களே தனியாக நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்களை சேர்த்துவிட்டனர். இந்த அவசர சட்டத்தால் மாண வர்கள் யாரும் பாதிக்கப்பட வில்லை. அவர்கள் யாரும் இங்கு வழக்கு தொடரவில்லை. எனவே, இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது' என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், 'ஒரே நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்ட பிறகும், சில மாநிலங்கள் தாங்களே நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்களை சேர்த்துள்ளனர். மொத்தம் 17 மாநிலங்களில் தனியாக மாணவர் சேர்க்கை நடத்தியுள்ளனர். இந்த நிலையில், அவசர சட்டத்துக்கு தடை விதித்தால் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும். லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, அவசர சட்டத்துக்கு தடை விதிக்க விரும்பவில்லை' என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT