Published : 11 Feb 2014 12:47 PM
Last Updated : 11 Feb 2014 12:47 PM
தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக உறுப்பினர்கள் தொடர்ந்து 5-வது நாளாக செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பணிகள் நடைபெறாமல் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
மக்களவை தொடங்கியதும் உறுப்பினர்கள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டதால் ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் நண்பகலில் கூடியது. அப்போது வெவ்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷமிட்டனர்.
குறிப்பாக தெலங்கானா விவகாரம் தொடர்பாக ஆந்திரப் பிரதேச எம்.பி.க்களும், தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படும் பிரச்சினை குறித்து தமிழக எம்.பி.க்களும் குரல் கொடுத்தனர்.
இதையடுத்து அவைத் தலைவர் மீரா குமார், கூட்டத்தை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். முன்னதாக ஒடிசா, மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த விபத்துகளில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மும்பையில் அம்பேத்கர் நினைவு மண்டபத்துக்கான இடத்தை கையகப்படுத்துவது தொடர்பான மசோதா அவையில் தாக்கல் செய்யப்பட்டது.
வடகிழக்கு பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இனரீதியான தாக்குதலை கண்டித்து காங்கிரஸ் எம்.பி. தக்கோம் மெய்ன்யா பேசினார். வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் கோரினார்.
மாநிலங்களவையில் மதிய உணவுக்கு முன்னதாக 3 முறை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. முன்னதாக கூட்டம் தொடங்கியதும் அதிமுக உறுப்பினர் வி.மைத்ரேயன், திமுக, தெலுங்கு தேசம், ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். அவை நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்ததாக அதிமுக எம்.பி.க்களின் பெயர்கள் இடம்பெற்ற ஆவணத்தை மைத்ரேயன் கிழித்தெறிந்தார்.
அப்பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அவர் கோஷமிட்டார். தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக திமுக உறுப்பினர்கள் கோஷமிட்டனர். தெலங்கானா விவகாரம் தொடர்பாக ஆந்திரப் பிரதேச எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
மீண்டும் மதியம் 2 மணிக்கு மாநிலங்களவை கூடியபோது, பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
இதையடுத்து அவை நடவடிக்கைகளை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவை துணைத் தலைவர் பி.ஜெ.குரியன் அறிவித்தார்.
எனினும், உறுப்பினர்களின் அமளிக்கு இடையே எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மசோதா, பழங்குடியினர் தொடர் பான சட்டத்திருத்தம், தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதுகாப்பு மசோதா ஆகியவை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.
தெலங்கானா விவகாரம் தொடர்பாக ஆந்திரப் பிரதேச எம்.பி.க்களும், தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படும் பிரச்சினை குறித்து தமிழக எம்.பி.க்களும் குரல் கொடுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT