Published : 12 Nov 2013 11:50 AM
Last Updated : 12 Nov 2013 11:50 AM
லண்டனில் இந்தியா ஹவுஸ் தொடங்கியதாக சியாமாஜி கிருஷ்ண வர்மாவுக்கு பதிலாக சியாமா பிரசாத் முகர்ஜியை புகழ்ந்தார் மோடி. இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் உள்ள கேதாவில் நடைபெற்ற மருத்துவமனை திறப்பு விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசியதாவது:
சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசிய சிந்தனையை வளர்க்கும் வகையில் பிரிட்டன் தலைநகரான லண்டனிலேயே இந்தியா ஹவுஸ் அமைப்பை ஏற்படுத்தியவர் சியாமா பிரசாத் முகர்ஜி. அவர் இந்திய புரட்சியாளர்களின் குரு என்று கருதப்படுகிறார். 1930-ம் ஆண்டு உயிரிழந்த சியாமா பிரசாத் முகர்ஜி, தனது அஸ்தியை பத்திரமாக வைத்திருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். குஜராத்தின் பெருமை மிகுந்த மைந்தன் சியாமா பிரசாத் ” என்றார்.
மோடி இவ்வாறு தெரிவித்துள்ளபோதிலும், அதில் உள்ள தகவல்கள் உண்மைக்கு மாறாக உள்ளன. சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தது கோல்கத்தாவில், குஜராத்தில் அல்ல. அவர் உயிரிழந்தது 1953-ம் ஆண்டு (இந்தியா சுதந்திரமடைந்த பிறகு). 1930-ம் ஆண்டில் அல்ல. அவர் உயிரிழந்த பின் மேற்கு வங்கத்தில் தகனம் செய்யப்பட்டது அவரது உடல்.
சியாமாஜி கிருஷ்ண வர்மா
உண்மையில் மோடி கூறிய பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரர் சியாமாஜி கிருஷ்ண வர்மாதான். சம்ஸ்கிருத பண்டிதரான அவர், குஜராத்தின் மாண்ட்வி நகரில் 1857-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி பிறந்தார். அவர்தான் லண்டனில் இந்தியா ஹவுஸ் அமைப்பை தொடங்கினார்.
வர்மாவின் அஸ்தியை ஸ்விட்சர்லாந்தி லிருந்து 2003-ம் ஆண்டு கொண்டு வர ஏற்பாடு செய்தவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகவல்கள் குஜராத் மாநில சுற்றுலாத்துறை இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.
சியாமா பிரசாத் முகர்ஜி
ஜவஹர்லால் நேரு அமைச்சரவையில் தொழிற்துறை அமைச்சராக பதவி வகித்த சியாமா பிரசாத் முகர்ஜி, காங்கிரஸிலிருந்து விலகி பாரதிய ஜன சங்கத்தை (பாஜகவின் தாய்க் கட்சி) 1951-ம் ஆண்டு தோற்றுவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குள் செல்ல இந்திய தேசியவாதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தியபோது கைது செய்யப்பட்டார். பின்னர், சிறையில் இருந்தபோதே அவர் உயிரிழந்தார்.
உடனே திருத்திக்கொண்டார்
மோடியின் இந்தப் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சர் மணீஷ் திவாரி, “சியாமா பிரசாத் முகர்ஜி
1930-ம் ஆண்டு லண்டனில் உயிரிழந்தார் என்ற மோடியின் புதிய ஜன சங்க வரலாற்றுப் பேச்சை கேட்டு கல்லறையில் இருக்கும் முகர்ஜியே தர்மசங்கடத்துக்கு உள்ளாகியிருப்பார்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதை பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், “தனது உரையை முடித்த பின்பு, ஒரு நிமிடத்துக்குள் மீண்டும் மேடைக்கு வந்த மோடி, தான் தவறுதலாக கூறிவிட்டதாகத் தெரிவித்தார்” என்றார். தனது உதவியாளரிடமிருந்து வந்த குறிப்பை படித்த பின்பு, தனது தவறை ஒப்புக் கொண்டு மோடி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் மட்டுமல்ல சில நாள்களுக்கு முன்பு தக்சசீல பல்கலைக்கழகம் இருந்தது பிகாரில் என்று மோடி கூறினார். உண்மையில் இன்றைய பாகிஸ்தான் பகுதியில்தான் அந்த பல்கலைக்கழகம் இருந்தது. - டெல்லி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT