Published : 03 Feb 2014 02:10 PM
Last Updated : 03 Feb 2014 02:10 PM
தமிழகத்தில் ரூ.1,450 கோடியில் அணு துகள் (நியூட்ரினோ) ஆராய்ச்சி மையம் அமைக்கப்படுகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.
மேலும் ரூ.4,500 கோடியில் தேசிய உயர் செயல்திறன் கணினிசார் அறிவியல் திட்டமும் ரூ.3,000 கோடியில் தேசிய புவியியல் தகவல் முறை திட்டமும் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
காஷ்மீர் மாநிலம், ஜம்முவில் 101-வது தேசிய அறிவியல் மாநாடு திங்கள்கிழமை தொடங்கியது. ஐந்து நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர். இதில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:
மக்களின் உடல்நலம், வேளாண்மை உற்பத்தியில் தன்னிறைவு, சுற்றுச்சூழலைப் பாதிக்காத எரிசக்தி, தண்ணீர் பற்றாக்குறை சவாலை சமாளிப்பது உள்ளிட்ட துறைகளில் நவீன ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 2 சதவீதம் அளவுக்கு அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்போதுதான் அறிவியலின் மூலம் சமூகத்துக்கு சேவையாற்ற முடியும்.
மத்திய அரசு சார்பில் ரூ.4,500 கோடியில் உயர் செயல்திறன் கணினிசார் அறிவியல் தேசிய திட்டமும் ரூ.3,000 கோடியில் தேசிய புவியியல் தகவல் முறை திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் தமிழகத்தில் ரூ.1450 கோடியில் அணு துகள் (நியூட்ரினோ) ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது.
அணுஆராய்ச்சியில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியுள்ளது. சென்னை அருகேயுள்ள கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் புரோட்டோடைப் அணுஉலை பணிகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவடையும்
சந்திரன், செவ்வாய்க் கிரகத்துக்கு நாம் வெற்றிகரமாக விண்கலங்களை அனுப்பியுள்ளோம். இன்னும் பல்வேறு சாதனைகளைப் படைப்போம் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.
போடி மலையில்..
நியூட்ரினோ என்பது அணுவைவிட மிகச் சிறிய துகள். கண்ணுக்குப் புலப்படாத இந்தத் துகளை ஆராய்வதன் மூலம் பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிந்து கொள்ள முடியும் என்று நம்பப்படுகிறது.
இந்த ஆராய்ச்சிக்காக நீலகிரி மலையில் சுரங்கம் தோண்டி “இந்திய நியூட்ரினோ ஆராய்ச்சி மையத்தை” (ஐ.என்.ஓ.) அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது.
ஆனால் இத்திட்டத்தால் நீலகிரியின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுந்ததால் இப்போது தேனி மாவட்டம் போடி மலைப் பகுதியில் பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ மையத்தை அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT