Published : 06 Jan 2014 08:45 AM
Last Updated : 06 Jan 2014 08:45 AM
மக்களவைத் தேர்தலில் 20 மாநிலங்களில் உள்ள 300 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
குறிப்பாக டெல்லி, ஹரியாணாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், தமிழ்நாட்டில் சில தொகுதிகளிலும், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பெரும்பாலான தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்திருப்பதாக அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் போட்டியிட மாட்டார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்வார்.
இது தொடர்பாக அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ் டெல்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: வரும் மக்களவைத் தேர்தலில் 15 முதல் 20 மாநிலங்களில் 250 முதல் 300 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தி வருகிறோம். பிப்ரவரி மாத இறுதியில் எங்களின் முடிவை அறிவிப்போம்.
தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ஜனவரி 15-ம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். அதன் பிறகு தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள் பற்றிய விவரம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் இல்லாதபட்சத்தில் கட்சியின் அரசியல் விவகாரக் குழு இறுதி வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும்.
எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பதை முடிவு செய்வதற்கு முன்பாக பிரதமர் வேட்பாளரை அறிவிக்க இயலாது” என்றார்.
தேர்தல் விவகாரக் குழு உறுப்பினர் பங்கஜ் குப்தா கூறுகையில், “மாநிலங்களில் 5 உறுப்பினர்களைக் கொண்ட வேட்பாளர்கள் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டமன்றத் தேர்தலை மக்களிடமிருந்து திரட்டப்பட்ட ரூ. 20 கோடி நிதியுதவியுடன் எதிர்கொண்டோம். மக்களவைத் தேர்தலுக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது” என்றார்.
நாடு முழுவதும் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஆம் ஆத்மி கட்சி ஈடுபட்டுள்ளது. ஜனவரி 10 முதல் 26ம் தேதி வரை கட்சியில் இணைய விரும்புவோர் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம் என அக்கட்சி தெரிவித்துள்ளது. இதற்கு கட்டணம் ஏதுமில்லை (முன்பு உறுப்பினராக சேர ரூ. 10 வசூலிக்கப்பட்டது).- பி.டி.ஐ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT