Published : 14 Feb 2014 09:40 AM
Last Updated : 14 Feb 2014 09:40 AM

புதிய அரசுடன் இணைந்து செயல்படத் தயார்: மோடியை சந்தித்த அமெரிக்கத் தூதர் உறுதி

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்த அமெரிக்க தூதர் நான்சி பாவெல், புதிதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள இந்திய அரசுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

இதன் மூலம் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடி, எதிர்காலத்தில் பிரதமரானால் அவரின் தலைமையிலான அரசுடன் இணைந்து செயல்படுவதில் தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்பதை அமெரிக்கா சூசகமாக தெரிவித்துள்ளது.

குஜராத் கலவரத்தைத் தடுக்க தவறியதாக நரேந்திர மோடி மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவருக்கான விசாவை 2005-ம் ஆண்டு அமெரிக்கா ரத்து செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து சர்ச்சை இருந்து வந்த நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் நான்சி பாவெல், குஜராத் தலைநகர் காந்தி நகரில் முதல்வர் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது குஜராத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை நான்சி பாராட்டியுள்ளார். குஜராத்தில் நடைபெற்று வருவது போன்ற ஆட்சி நிர்வாகத்தை உலகின் பிற நாடுகளும் பின்பற்றலாம். முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழ்நிலை குஜராத்தில் நிலவுகிறது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

குஜராத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட அமுல் திட்டத்தைப் போன்று ஆப்கனில் ஏற்படுத்தலாம் என நான்சி தெரிவித்துள்ளார். தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை, உலக வர்த்தக அமைப்பு, பாது காப்பு ஒத்துழைப்பு போன்றவை குறித்தும் நான்சி பாவெல் பேசி யுள்ளார்.

மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு நான்சி பாவெல் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: “அமெரிக்கா இந்தியா இடையேயான நட்புறவு மிகவும் முக்கியமானது. மக்களவைத் தேர்தலில் இந்திய மக்கள் தேர்ந் தெடுக்கும் அரசுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.

இந்த சந்திப்பு தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், “மக்களவைத் தேர்தலையொட்டி இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளை சந்தித்து பேச அமெரிக்கத் தூதரகம் முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் மோடியுடனான சந்திப்பு நடைபெற்றுள்ளது.

அமெரிக்க இந்திய நட்புறவு, பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள், மனித உரிமை, இந்தியாவில் அமெரிக்க வர்த்தகம் மற்றும் முதலீடு போன்றவை குறித்து மோடியுடன் நான்சி பாவெல் பேசியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சல்மான் குர்ஷித் பேட்டி

மோடியுடனான நான்சி பாவெலின் சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “வெளிநாட்டு தூதர்கள் இந்திய அரசியல் தலைவர்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட் பதற்கு தடை ஏதும் இல்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x