Published : 20 Jan 2017 09:10 AM
Last Updated : 20 Jan 2017 09:10 AM
திருமலையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட இலவச அன்ன பிரசாதத்தில் நேற்று பூரான் இருந்ததைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்ய தினமும் சுமார் 1 லட்சம் பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். இவர்களுக்காக திருமலை, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ், மாத்ரு ஸ்ரீ தரி கொண்டா வெங்கமாம்பா காம்ப்ளக்ஸ், மற்றும் சத்திரங்களில் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
இதன் மூலம் தினமும் சுமார் 40 முதல் 45 ஆயிரம் பக்தர்கள் பயன்பெறுகின்றனர். இந்த அன்ன பிரசாத திட்டம் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவால் தொடங்கப்பட்டது. பக்தர்கள் கோயில் உண்டியல் செலுத்தும் காணிக்கையை அரசு வங்கிகளில் டெபாசிட் செய்து, அதன்மூலம் வரும் வட்டிப் பணத்தில் இந்த அன்ன பிரசாத திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், நேற்று திருமலையில் உள்ள மத்திய ரிசப்ஷன் அலுவலகம் அருகே மதியம் பக்தர்களுக்கு இலவச அன்ன பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. அப்போது ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாசுலு என்பவருக்கு பரிமாறப்பட்ட அன்ன பிரசாதத் தில் பூரான் இருந்தது.
இதனைக் கண்டு ஸ்ரீநிவாசுலு மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கிருந்த பக்தர்களும் அவர்களுக்கு வழங்கிய இலவச அன்ன பிரசாதத்தைச் சாப்பிடாமல் பயந்து கீழே கொட்டிவிட்டனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளிடம் பக்தர்கள் புகார் தெரிவித்தனர். இலவச உணவில் பூரான் இருந்தது பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித் தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT