Published : 07 Mar 2014 12:00 AM
Last Updated : 07 Mar 2014 12:00 AM
லோக்பாலுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பரிந்துரைக் குழு அமைப்பதற்கு லோக்பால் சட்ட விதிகளின் கீழான நடைமுறைகள் தடைக்கல்லாக நிற்கிறது.
பிரதமர் மன்மோகன் சிங்கை தலைவராகவும், மக்களவைத் தலைவர் மீரா குமார், உச்ச நீதிமன்ற நீதிபதி எச்.எல்.தத்து, மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், சட்ட வல்லுநர் பி.பி.ராவ் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டது லோக்பால் தேர்வுக்குழு.
இந்த குழு முதல் தடவையாக பிப்ரவரி 3-ம் தேதி கூடி ஆலோசனை நடத்தியபோது பி.பி.ராவை சேர்க்க சுஷ்மா ஆட்சேபம் தெரிவித்தார்.
லோக்பால் தலைவரையும் 8 உறுப்பினர்களையும் நியமிப்பதற்கான பெயர்கள் அடங்கிய பட்டியலை தயாரிக்கும் பரிந்துரைக் குழுவை தேர்வு செய்வது உச்ச நீதிமன்றத்துக்கு உள்ள பங்கு.
உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 21ம் தேதி, இந்த பரிந்துரைக் குழுவுக்கு நீதிபதி கே.டி.தாமஸையும் இதர 7 உறுப்பினர்களையும் தேர்வு செய்தது., இந்த குழுவில் இவர்கள் தவிர மூத்த வழக்கறிஞர் பாலி. எஸ்.நாரிமன் (ஏற்கெனவே விலகிவிட்டார்), முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய், குரேஷி, டெல்லியில் உள்ள லேடி ராம் கல்லூரியின் முதல்வர் மீனாட்சி கோபிநாத், கல்வியாளர் மிருனாள் மீரி, ஆந்திரப் பிரதேச முன்னாள் தலைமைச் செயலர் காக்கி மாதவ ராவ், மூத்த பத்திரிகையாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான எச்.,கே.துவா ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.
இந்த பரிந்துரைக்குழு லோக்பால் தலைவர், 8 உறுப்பினர்கள், நீதித்துறை சார்ந்த 4 உறுப்பினர்கள், நீதித்துறை சாராத 4 உறுப்பினர்களுக்கான பொறுப்புகளுக்காக பெறப்பட்ட 350 விண்ணப்பங்களை பரிசீலித்து அதற்கான பெயர்களை, நியமனம் செய்வதற்காக தேர்வுக் குழுவுக்கு பரிந்துரைக்கும். இது தான் பரிந்துரைக் குழுவின் பணி.
லோக்பால் தலைவர் பதவியில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருப்பவர் அல்லது இருந்தவர், நீதிபதியாக தற்போது இருப்பவர் அல்லது இருந்தவர், குற்றம் குறைக்கு அப்பாற்பட்டு நேர்மையும் சிறந்த திறமையும் உடைய ஒருவர் பணியாற்றலாம்.
அதே போல நீதித்துறை சாராத உறுப்பினர் அப்பழுக்கற்றவராகவும் திறமைசாலியாகவும் லஞ்ச ஒழிப்பு விவகாரங்களில் 25 ஆண்டுக்கு மேற்பட்ட நிபுணத்துவம் மிக்கவராகவும், பொது நிர்வாகம், நிதி,காப்பீடு, வங்கி,சட்டம், மேலாண்மையில் அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
இந்த பரிந்துரைக் குழுவில் இடம்பெற ஆரம்பத்திலேயே வழக்கறிஞர் பாலி நாரிமன் மறுத்து விட்டார். லோக்பால் நியமனத்துக்கான இப்போதுள்ள தேர்வு நடைமுறை திறமைமிக்கவரையும் சுயமாகவும் துணிச்சலுடனும் செயல்படுபவரையும் ஓரங்கட்டுவதாகவே இருக்கும் என்பதுதான் பரிந்துரைக் குழுவுக்கு பொறுப்பு ஏற்க மறுப்பதற்கான காரணம் என நாரிமன் கூறி இருக்கிறார்.
ஊழியர்கள் மற்றும் பயற்சித் துறை தரும் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்களிலிருந்து தெரிவு செய்யும் எழுத்தர் பணியை உடைய ஒரு குழுவில் இடம்பெற தனக்கு விரும்ப வில்லை என்றும் ‘தி இந்து’விடம் நாரிமன் தெரிவித்தார்.
பரிந்துரைக் குழுவுக்கு தலைமை வகிப்பதாக அறிவிக்கப்பட்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸும் பொறுப்பை ஏற்க மறுத்தார். ‘நாரிமன் சொல்வதில் எனக்கும் உடன்பாடுதான்’ என தாமஸ் கோட்டயத்திலிருந்து ‘தி இந்து’விடம் பேசியபோது தெரிவித்தார்.
பரிந்துரைக் குழுவின் பரிந்துரைகள் தேர்வுக் குழுவை கட்டுப்படுத்தாது. இப்படிப்பட்ட சூழலில் பரிந்துரைக் குழுவின் வேலையை தேர்வுக்குழுவே செய்யலாம் என்றார் தாமஸ்.
இதுபற்றி ஊழியர்கள் துறை இணை அமைச்சர் வி.நாராயணசாமிக்கு தாமஸ் கடிதமும் எழுதியிருக்கிறார்.
பரிந்துரைக் குழு தரும் பட்டியலில் உள்ள எவரையும் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் தேர்வுக் குழுவுக்கு இல்லை. லோக்பால் சட்டத்தின் பிரிவு 4 உட்பிரிவு 3ல் உள்ள இரண்டாவது பிரிவுகளின்படி இதுதான் நிலவரம்.
லோக்பால் உறுப்பினர்களாக யார் இருக்கலாம் என்பதை தேர்வுக்குழுவே முடிவு செய்யலாம் என்கிறபோது பரிந்துரைக் குழுவுக்கு அவசியம் என்ன என்று நாராயணசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் தாமஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT