Published : 18 Feb 2014 12:00 AM
Last Updated : 18 Feb 2014 12:00 AM
மக்களவையில் திங்கள்கிழமை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, முன்னெப்போதும் இல்லாத வகையில் சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த அமைச்சர்களே அமளியில் ஈடுபட்டனர்.
அதைப் பொருட்படுத்தாது மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பட்ஜெட் உரையை முழுமையாக வாசித்தார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சி காலத்தின் கடைசி பட்ஜெட்டை ப.சிதம்பரம் திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
அவை தொடங்கியதுமே தெலங்கானா விவகாரம் தொடர்பாக சீமாந்திரா பகுதி எம்.பி.க்கள் கோஷமிடத் தொடங்கினர். பாபி ராஜு, ஜி.வி.ஹர்ஷ குமார், சூர்ய பிரகாஷ் ரெட்டி உள்ளிட்ட எம்.பி.க்கள் மட்டுமின்றி மத்திய அமைச்சர்கள் சிரஞ்சீவி, டி.புரந்தேஸ்வரி, கே.எஸ்.ராவ் ஆகியோரும் அவையின் மையப் பகுதியில் நின்று, ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசத்தை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜு தனது இருக்கை அருகே நின்றபடியே குரல் கொடுத்தார்.
உறுப்பினர் ஜி.வி.ஹர்ஷகுமார், மக்களவைத் தலைவர் மேஜை அருகே சாய்ந்து நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை விலகிச் செல்லுமாறு உறுப்பினர்கள் பலர் கூறியபோதும், அதை அவர் கேட்கவில்லை.
சீமாந்திரா பகுதிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் மட்டுமின்றி வெவ்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அதிமுக உள்ளிட்ட பிற கட்சி உறுப்பினர்களும் கோஷமிட்டனர்.
இதனால் அதிருப்தியடைந்த சமாஜ்வாதி, இடதுசாரிக் கட்சி எம்.பி.க்கள், அவையில் ஒழுங்கின்மையான சூழ்நிலை இருப்பதாகவும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படியும் அவைத் தலைவர் மீரா குமாரிடம் முறையிட்டனர். இது தொடர்பான தனது அலுவலகத்திற்கு வந்து பேசுமாறு அவர்களிடம் மீரா குமார் தெரிவித்தார்.
முன்னதாக காலை 11.10 மணிக்கு ப.சிதம்பரம் பட்ஜெட் உரையை வாசிக்க ஆரம்பித்தார். அப்போது கூச்சல், குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 2 நிமிடங்கள் காத்திருந்த சிதம்பரம், மத்திய அமைச்சர்கள் சுஷீல் குமார் ஷிண்டே, கமல்நாத் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், ‘பட்ஜெட் உரையை வாசிப்பதிலிருந்து நான் பின்வாங்கப்போவதில்லை’ என்று கூறியபடியே தனது உரையை தொடர்ந்தார்.
தொடர்ந்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தனது உரையை முழுமையாக வாசித்த பின்பே தனது இருக்கையில் ப.சிதம்பரம் அமர்ந்தார். உரையினிடையே திருக்குறளை மேற்கோள்காட்டி அவர் பேசினார்.
அவரின் உரையின்போது, கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகள் குறித்து தெரிவித்தார். அப்போது காங்கிரஸ் கூட்டணி உறுப்பினர்கள் மேஜையை பலமாக தட்டி ஆரவாரம் செய்தனர்.
ப.சிதம்பரம் முதன் முதலில் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் இதுவாகும். இதற்கு முன்பு அவர் 8 முறை முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
இதற்கு முன்பு மொரார்ஜி தேசாய் 10 முறையும், பிரணாப் முகர்ஜி, யஷ்வந்த் சின்ஹா, ஒய்.பி.சவாண், சி.டி.தேஷ்முக் ஆகியோர் 7 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT