Published : 12 Oct 2014 01:09 PM
Last Updated : 12 Oct 2014 01:09 PM
தேர்தல் வாக்குறுதிகளை பாஜக ஒருபோதும் காப்பாற்றாது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஹரியாணா சட்டசபை தேர்தலை முன்னிட்டு பைவானி பகுதியில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பாஜகவும் இந்திய தேசிய லோக் தளமும் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதுவரை காணாமல் போயிருந்த அந்த கட்சிகளின் தலைவர்கள் இப்போது வீடுகளில் இருந்து வெளியே வந்துள்ளனர். சில தலைவர்கள் சிறையில் இருந்து பிரச்சாரத்துக்கு வந்துள்ளனர்.
பாஜகவும் இந்திய தேசிய லோக் தளமும் வாக்குறுதிகளை ஒருபோதும் காப்பாற்றாது. பாஜக வாக்குறுதிகளை அள்ளி வீசும். ஆனால் ஒன்றையும் நிறைவேற்றாது. அந்த கட்சி களின் மாய வலைகளில் மக்கள் சிக்கிவிடக் கூடாது. சிலர் சிறையில் இருந்து ஆட்சி நடத்துவோம் என்று கூறுகிறார்கள். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பது மட்டும்தான் அவர்களின் நோக்கம். மக்கள் நலனில் அவர்களுக்கு அக் கறை இல்லை.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அமெரிக்கா சென்றார். அவரது பயணத்தால் இந்தியாவுக்கு என்ன பயன் ஏற்பட்டது, எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பதற்கு காலம் பதில் அளிக்கும். ஆனால் ஒரு விஷயத்தில் அவர் தவறிழைத்திருப்பதை இப்போதே உறுதியாகக் கூறலாம். அமெரிக்க மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி பல்வேறு சலுகைகளை அளித்துள்ளார். இதனால் இந்தியாவில் மருந்து களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
பாஜகவை பொறுத்தவரை ஏழைகளின் நலன்களில் அக் கறை இல்லை. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பல்வேறு திட்டங்களை செயல் படுத்துவோம் என்று அந்த கட்சி வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை ஒன்றைகூட நிறைவேற்றவில்லை.
ஏராளமான மக்கள் நலத்திட் டங்களை கடந்த காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. இவற்றின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். ஆனால் தற்போது அந்தத் திட்டங்களை பலவீனப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. இதன் மூலம் ஏழைகளுக்கு பாஜக அநீதி இழைக்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில் ஹரியாணா மாநிலம் பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளது என்றார் சோனியா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT