Published : 21 Nov 2013 12:00 AM
Last Updated : 21 Nov 2013 12:00 AM
பெங்களூர் ஏடிஎம் மையத்தில் மர்ம நபரால் கொடூரமாக தாக்கப்பட்ட பெண் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். அவரைத் தாக்கிய குற்றவாளி தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால் தனிப்படை போலீசார் தமிழகத்திற்கு விரைந்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை காலை 7.08 மணியளவில் பெங்களூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள ஏடிஎம் மையத்தில் வங்கிய ஊழியரான ஜோதி உதய் (38) பணம் எடுக்க சென்றார். அப்போது திடீரென உள்ளே நுழைந்த ஒருவர் ஷட்டரை மூடிக்கொண்டு, பணத்தைக் கேட்டுள்ளார். ஜோதி பணம் கொடுக்க மறுத்ததால் அவரை கத்தியால் தாக்கி இருக்கிறார்.
ரத்தவெள்ளத்தில் நிலைக்குலைந்த ஜோதியின் கைப்பையில் இருந்த பணத்தையும், 3 ஏடிஎம் கார்டுகளையும் அவரது செல்போனையும் தூக்கிக்கொண்டு ஓடி விட்டார். அதே நேரம் ஜோதியின் கழுத்தில் இருந்த தங்க செயின், வளையல் ஆகிய எதையும் திருடன் எடுக்கவில்லை.
ஏடிஎம் மையத்தில் பாதுகாவலர் இல்லாததால் இந்த சம்பவம் உடனடியாக யாருக்கும் தெரியவில்லை. காலை 10 அளவில் பள்ளி மாணவர்கள் சிலர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
ரத்தவெள்ளத்தில் கிடந்த ஜோதியை விக்டோரியா மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதித்தனர். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதால் பிறகு நிமான்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஜோதியின் மண்டை ஓடு உடைந்து, அதன் துகள்கள் மூளையில் பதிந்திருப்பதைக் கண்டறிந்தனர்.
அதனால் இரவோடு இரவாக நரம்பியல் சிறப்பு மருத்துவர் வெங்கட் ரமணா தலைமையில் அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்து அந்த துகள்களை நீக்கி உள்ளனர். இதனால் ஜோதியின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
வலது பக்கம் செயலிழப்பு
இந்நிலையில், ஜோதியின் கணவர் உதயிடம் பேசினோம். ''கடந்த 15 ஆண்டுகளாக ஜோதி மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு எவ்வித முன் விரோதமும் இல்லை. திருடர்களே இந்த கொடூர தாக்குதலை நடத்தி உள்ளனர். ஜோதியை நிமான்ஸ் மருத்துமனையில் இருந்து பிஜிஎல் மருத்துவமனைக்கு மாற்றி இருக்கிறோம். தலையில் வலப்பக்கம் அடிப்பட்டு இருப்பதால் வலது கால், வலது கை செயலிழந்து விட்டது.
முகத்தில் காயம் பட்டிருப்பதால் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும் செய்யப்பட இருக்கிறது. தொடர்ந்து திவீர சிகிச்சைப்பிரிவில் இருப்பதால் முழுமையான விபரம் தெரியவில்லை'' என்றார்.
தனிப்படை தமிழம் விரைவு
ஏடிஎம் மையத்தில் பெண் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து பெங்களூர் மாநகர காவல்துறை ஆணையர் ராகவேந்திரா அவ்ரத்கரிடம் பேசினோம். ''குற்றவாளியை பிடிப்பதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கர்நாடகம் முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களுக்கு சிசிடிவி காட்சிகளை அனுப்பி இருக்கிறோம்.
தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு பக்கத்தில் தமிழ்நாடு பேருந்து நிலையம் இருப்பதால் குற்றவாளி தமிழ்நாட்டிற்கு தப்பி சென்றிருப்பதாக சந்தேகிக்கிறோம். அதனால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர் ஆகிய பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT