Last Updated : 22 Jan, 2014 12:00 AM

 

Published : 22 Jan 2014 12:00 AM
Last Updated : 22 Jan 2014 12:00 AM

உச்சக்கட்டத்தில் நீயா- நானா போட்டி

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கும் மத்திய இணையமைச்சர் நாராயணசாமிக்கும் இடையேயான போட்டி உச்சக்கட்டத்தில் உள்ளது. அதாவது, மக்கள் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அவருக்குப் பெருமை கிடைக்கக்கூடாது என்று இவரும், இவருக்குப் பெருமை கிடைக்கக்கூடாது என்று அவரும் போட்டி போடுகின்றனர்.

காரைக்காலில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய கடல்சார் பல்கலைக்கழக கிளைத் தொடக்க விழாவில் மனமாச்சர்யங்களைக் களைந்து முதல்வர் ரங்கசாமியும் கலந்துகொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதாக ‘தி இந்து’ பதிவு செய்திருந்தது.

அழைக்கவுமில்லை, செல்லவுமில்லை…

ஆனால், அது பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் அந்த விழாவுக்கு வருமாறு ரங்கசாமியை நாராயணசாமி அழைக்கவில்லை, முதல் நாள் வேறொரு விழாவுக்காக காரைக்காலுக்கு வந்திருந்த ரங்கசாமியும் இந்த விழாவுக்குச் செல்லவில்லை. ஆனால், வழக்கம்போல தங்களால்தான் மக்களுக்கான திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன என்பது போன்ற தோற்றத்தை அவரவர் பங்கேற்ற விழாக்களில் இருவருமே அழுத்தமாகப் பதிவு செய்தனர்.

முட்டுக்கட்டை போடுகிறார்…

காரைக்காலுக்கு வந்திருந்தபோது முதல்வர் ரங்கசாமி, சிறப்பு மருத்துவமனை விவகாரத்தில் அதிகாரிகள் மூலமாக மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதாகவும், என்ன இடையூறுகள் வந்தாலும் காரைக்காலுக்கு அரசு பல்நோக்கு மருத்துவமனையை கொண்டு வந்தே தீருவேன் என்றும், இந்த மாத இறுதிக்குள் திட்டப் பணிகளை தொடங்கப்போவதாகவும் பேசினார்.

பிப்ரவரி இறுதிக்குள் பணி தொடங்கும்…

அதைப் பார்த்துக் கொண்டு நாராயணசாமியால் வாளாவிருக்க முடியுமா? அதற்குப் பதிலளிக்க கடல்சார் பல்கலைக்கழக விழாவைப் பயன்படுத்திக் கொண்டார் அவர். மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மூலம் பேசி ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் நிதியுதவியுடன் காரைக்காலில் பிப்ரவரி மாத இறுதிக்குள் பல்நோக்கு மருத்துவமனை பணிகள் தொடங்கப்படும் என்று ஆரவாரத்தோடு அறிவித்தார் நாராயணசாமி.

இருவரும் தனித்தனியாக அறிவித்திருந்தாலும் மருத்துவமனையும் அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இடமும் ஒன்றுதான். திட்டத்தை யார் கொண்டு வருவது, அதன்மூலம் யாருக்கு பெயர் கிடைப்பது என்பதில்தான் இருவருக்கும் பிரச்சினை. அதனால் புதுச்சேரி அரசே செய்யும் என்று ரங்கசாமியும், இல்லையில்லை ஓ.என்.ஜி.சி. நிதியுதவியோடு செய்வோம் என்று நாராயணசாமியும் மார்தட்டுகின்றனர்.

இருவரும் ‘ஈகோ’ சாமிகள்…

“இப்படி மாறி மாறி அறிவிப்பார்களே தவிர, அவர் அறிவித்ததை இவரும் இவர் அறிவித்ததை அவரும் எப்படியாவது நிறுத்தத்தான் பார்ப்பார்கள், பிறகு எப்படி திட்டம் நிறைவேறும்? ரங்கசாமியும் நாராயணசாமியும் ஈகோ பார்த்துக் கொண்டே புதுச்சேரி மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதிகரித்துக் கொண்டே போகிறார்கள்.

இப்படியே போனால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட கதி இந்த நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளுக்கும் ஏற்படும்” என்கிறார் காரைக்காலைச் சேர்ந்த தொழிலதிபர் சக்திவேல் உடையார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x