Published : 28 Oct 2015 11:16 AM
Last Updated : 28 Oct 2015 11:16 AM
தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க தடை விதிப்பது இந்து பாரம்பரியத்துக்கு எதிரானது. தீமையை நன்மை வென்றதை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடிக்கப்படுகிறது.
"தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க தடை விதிப்பது இந்து பாரம்பரியத்துக்கு எதிரானது. தீமையை நன்மை வென்றதை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடிக்கப்படுகிறது. எனவே, பட்டாசு வெடிக்க தடை விதிப்பது இந்துக்களின் பாரம்பரிய உரிமையை பாதிக்கும்" என பட்டாசுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் அருள்மிகு ஐயப்பன் சங்கம் என்ற இந்து அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த 6 மாத குழந்தைகளான அர்ஜுன் கோயல், அவுரவ் பண்டாரி மற்றும் 14 மாத குழந்தையான ஜோயா ராவ் பாசின் ஆகியோர் சார்பில் அவர்களது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், தீபாவளி, தசரா பண்டிகைகளின்போது அதிக அளவில் பட்டாசு வெடிக்கப் படுகிறது. இதன்மூலம் ஏற்படும் ஒலி மாசு, சுற்றுச்சூழல் மாசு பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது. உலகில் அதிக மாசு ஏற்படும் நகரமாக கடந்த 2 ஆண்டுகளாக டெல்லி பட்டியலிடப்பட்டுள்ளது. உடல் உறுப்புகள் இன்னும் வளராத நிலையில் உள்ள எங்களுக்கு இதுபோன்ற பட்டாசுகளின் வெடிச் சத்தத்தால் பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் இருமல், நுரையீரல் நோய்களுக்கும் பட்டாசு புகை மூலம் ஏற்படும் மாசு காரணமாக அமைகிறது. சுவாச கோளாறு இருப்பவர்களுக்கு இதன்மூலம் நோய் அதிகரிக்கிறது. பெங்களூரு நகரில் 2013-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி, தீபாவளி பண்டிகையின்போது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 32 சதவீதம் மாசு அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகையின்போது, சுவாசக் கோளாறு நோய் பாதிப்பு 40 சதவீதம் அதிகரிப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
தீபாவளி பண்டிகையின்போது, மாசு ஏற்படாமல் தடுக்க பட்டாசு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு எந்த விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை. அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் கீழ், சுத்தமான, சுகாதாரமான சூழலில் வளர்வது எங்களது அடிப்படை உரிமை. சுகாதாரமான காற்று எங்களது எனவே, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் விற்க உரிமம் வழங்கும் அரசுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
பட்டாசுக்கு தடை கோரிய வழக்கு இன்று (புதன்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில், பட்டசுக்கு தடை கோரும் வழக்கில் தங்களையும் சேர்த்துக்கொள்ளக் கோரி சிவகாசியைச் சேர்ந்த தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், பட்டாசுக்கு தடை கோருபவர்கள் மனு தவறான புரிதலால் ஏற்பட்ட விளைவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தங்கள் மாவட்டம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பட்டாசு உற்பத்தியில் தொடர்பு கொண்டிருப்பதால், பட்டாசு தடை தங்களை வெகுவாக பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று காரசார விவாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT