Published : 28 Aug 2015 11:48 AM
Last Updated : 28 Aug 2015 11:48 AM
"இந்த நாட்டை இடஒதுக்கீட்டு முறையில் இருந்து விடுவியுங்கள்... இல்லாவிட்டால், மக்கள் அனைவரும் இடஒதுக்கீட்டுக்கு அடிமைகளாக கிடப்பர்"
22 வயது ஹர்திக் படேல் அகமதாபாத்தில் உள்ள தனது அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு இந்த அறைகூவலை அரசுக்கு முன்வைத்துள்ளார்.
'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு ஹர்திக் படேல் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டியின் முழுவடிவம்:
'மதிப்பெண்ணுக்கு மதிப்பில்லை'
எங்கள் சமூகத்தினர் நன்கு படித்து 80%, 90% மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும்கூட அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்ற ஒரு நடைமுறை இருப்பதால்தான் எங்களுக்கு இந்த அவலம் நேர்கிறது.
நல்ல மதிப்பெண் பெற்றும் வேலை கிடைக்காததால் நாங்கள் எங்கள் குடும்ப தொழிலையே மேற்கொள்ளும் நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்படுகிறோம். வேலைவாய்ப்புகள் பட்டியல் இனத்தவரால் பறித்துக் கொள்ளப்படுகிறது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடி இனத்தவருக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் பொதுப் பிரிவிலும் வேலை பெறுகின்றனர்.
எனவே, இந்த அரசு ஒன்று இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இல்லையேல் படேல் சமூகத்தினரை ஓ.பி.சி. பிரிவில் இணைக்க வேண்டும். இரண்டில் ஒரு முடிவை அரசாங்கம் எடுக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது.
இந்த நாட்டை இடஒதுக்கீட்டு முறையில் இருந்து விடுவியுங்கள் இல்லாவிட்டால் மக்கள் அனைவரும் இடஒதுக்கீட்டுக்கு அடிமைகளாக கிடப்பர்.
'என் வழி படேல், பால் தாக்கரே வழி...'
இந்த நாட்டின் அரசியலையும் இடஒதுக்கீடு போன்ற சில கட்டமைப்புகளையும் மாற்றியமைப்பதே என் லட்சியம். வெறும் அரசியல் செய்வதற்காக நான் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. என்னிடம் இருப்பது ரிமோட் கன்ட்ரோல் மட்டுமே. அதை நான் பற்றிக்கொண்டு என் முயற்சிகளை முன்னெடுத்துச் மாற்றத்துக்கு வித்திடுவேன். சர்தார் படேல், பால் தாக்கரே வழியே என் வழியும்.
'அடுத்தது என்ன?'
2 மாத போராட்டம், ஒரு மாபெரும் பேரணி அதனைத் தொடர்ந்த வன்முறை உயிரிழப்பு என இத்தனை களேபரங்களுக்குப் பின் அடுத்தக் கட்ட நடவடிக்கை பற்றி கூறும்போது, "படேல் சமூகத்தைச் சேர்ந்த 7 லட்சம் மக்கள், என் ஆதரவாளர்களான அவர்கள் வங்கிகளில் இருந்து தங்கள் முதலீட்டை திரும்பப்பெறுவர். பால், காய்கறி விநியோகத்தை நிறுத்துவர். இதுபோல் இன்னும் நிறைய முட்டுக்கட்டைகளை எங்களால் போட முடியும்.
அன்று என்னை கைது செய்து போலீஸார் வன்முறைக்கு வழிவகுத்தனர். அதன் காரணமாகவே ராணுவத்தினர் பாதுகாப்புக்கு அவசியம் ஏற்பட்டது. என்னை கைது செய்யாமல் இருந்திருந்தால் எதுவுமே நடந்திருக்காது.
போலீஸாரே வன்முறையைத் தூண்டினர். என் சமூக பெண்களை அடித்து இழிவுபடுத்தி வன்முறையைத் தூண்டிவிட்டனர். இரண்டாவது ஜாலியன்வாலாபாக் சம்பவம் இது" என்றார்.
'சர்தார் ஹர்திக் என்று அழையுங்கள்'
ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தை ஒரு சில நாட்களில் ஈர்த்திருக்கிறார் ஹர்திக் படேல். மாநில அரசை அவரது போராட்டம் ஆட்டம் காண வைத்திருக்கிறது. இந்நிலையில், சிலர் ஹர்திக் கேஜ்ரிவால், ஹர்திக் மோடி என்ற அடைமொழிகளில் அழைக்கின்றனர். ஆனால், அவரோ என்னை சர்தார் ஹர்திக் என்று அழையுங்கள் அதுவே என்னை மகிழ்விக்கும் என்கிறார்.
'குஜராத்- உண்மை முகம் என்ன?'
குஜராத் மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தின் உண்மை முகமும் அது வெளியே பிரதிபலிக்கப்படும் விதமும் வெவ்வேறானதாக உள்ளது. உத்தரப்பிரதேசம், பிஹாரில் என்ன நடக்கிறதோ அதற்கு சமமானதே குஜராத்தில் நடப்பதும். அங்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். கிராமப்புறங்களுக்குச் செல்லுங்கள். நிலைமை எப்படி இருக்கிறது என்பது உங்களுக்கே தெரிய வரும்.
'கைப்பாவை ஆனந்திபென்'
படேல் சமூகத்தினர் கோரிக்கை பற்றி பேச்சுவார்த்தை நடத்த மாநில அரசு தயாராக இருக்கும் நிலையில், "குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் ஒரு கைப்பாவை. அவர் ஆட்சி பீடத்தில் இருக்கிறாரே தவிர அவரிடம் எவ்வித அதிகாரமும் இல்லை. அவரை வேறு யாரோ இயக்குகின்றனர். எனவே, படேல் சமூகத்தினருக்காக குரல் எழுப்புவரே எங்களையும், குஜராத்தையும் இனி ஆள முடியும்" என்கிறார்.
எங்கள் சமூக நலனுக்காகவே..
இந்தப் போராட்டம் எல்லாம் நான் சார்ந்த படேல் சமூகம் நலம் பெற வேண்டும் என்பதற்காகவே தவிர இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கோ அல்லது பிற வகுப்பினருக்கோ எதிரானது அல்ல. வெளிநாட்டு வாழ் படேல் சமூகத்தினரிடமிருந்து நன்கொடை ஏதும் பெறப்படவில்லை. இங்கே உள்ள உறுப்பினர்களிடம் மட்டுமே பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.
12 பேர் குழு:
ஒரு பிரம்மாண்ட போராட்டத்துக்கு ஆள் திரட்டுவது என்பது அவ்வளவு எளிதல்ல. இதை எளிமையாக செய்து முடிக்க சமூக வலைத்தளங்களில் செய்தியை எடுத்துச் செல்ல 12 பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறார் ஹர்திக் படேல். இந்தக் குழுவானது ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் படேல் சமூகத்தினருக்கு 12 லட்சம் குறுந்தகவலை அனுப்பியிருக்கிறது. அப்படித்தான் ஹர்திக் தலைமையிலான பொதுக்கூட்டத்துக்கு அவ்வளவு பேர் திரண்டனர்.
தமிழில்- பாரதி ஆனந்த்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT