Last Updated : 28 Apr, 2015 02:48 PM

 

Published : 28 Apr 2015 02:48 PM
Last Updated : 28 Apr 2015 02:48 PM

ம.பி.யில் அதிரடி: பஞ்சாயத்து தலைவிகளின் கூட்டத்தில் கணவர்களுக்கு தடை

மத்திய பிரதேசத்தின் மகளிர் பஞ்சாயத்து தலைவிகளின் கூட்டத்தில் அவர்களது கணவன்மார்கள் கலந்து கொள்ள அம் மாநில அரசு சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது, தேசியப் பஞ்சாயத்து நாள் அன்று பிரதமர் நரேந்தர மோடி பேசியதை அடுத்து எடுக்கப்பட்ட முடிவு எனக் கருதப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட தேசிய பஞ்சாயத்து நாளில் பிரதமர் டெல்லியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். அதில் பேசிய போது அவர், பெண் பஞ்சாயத்து தலைவர்கள் இடையே அவர்களது கணவன்மார்களின் தலையீடுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் எனவும், அவர்கள் சுயமாக சிந்தித்து தன் கிராமங்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் சூழலை உருவாக்கித் தரப்படும் என்றும் உறுதியளித்தார்.

இதை தொடர்ந்து ம.பியின் பாரதிய ஜனதா ஆட்சியின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று, தன் பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான கோபால் பார்கவா மற்றும் மத்திய ஊரக வளர்ச்சித்துறையின் செயலாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் உட்பட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து அந்த துறையின் சார்பில் ஒரு அதிரடி உத்தரவு இடப்பட்டுள்ளது. அதில், பெண்கள் தலைமையிலான கிராமப் பஞ்சாயத்துக்களின் கூட்டங்களில் அவர்களது கணவன்மார்கள் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ம.பி மாநில ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் கோபால் கூறுகையில், 'பஞ்சாயத்து தலைவர்களாக இருக்கும் பெண்களின் கணவன்மார்கள் அவர்கள் பணியில் அனாவசியமாக தலையிடுவது கூடாது என பிரதமர் விரும்பி உள்ளார். இதனால், அதன் பெண் தலைவர்கள் முன்னேற்றம் காண்பதுடன் அவர்களின் கிராமங்களும் வளர்ச்சி பெறும்.

இதனால், பெண்கள் தலைமையில் நடைபெறும் பஞ்சாயத்து கூட்டம் அல்லது நடவடிக்கைகளில் தலையிடும் அவர்கள் கணவர்கள் அல்லது ஆண் உறவினர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவு உடனடியாக அமுல்படுத்தப்படுகிறது' எனத் தெரிவித்தார்.

இதை அடுத்து ம.பி மாநில ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அமைத்து மாவட்டங்கள், தாலுக்காக்கள், மண்டலங்கள் மற்றும் கிராமங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் பெண் தலைவர்கள் தலைமையில் நடைபெறும் பஞ்சாயத்து கூட்டங்களின் நடவடிக்கைகள் மற்றும் கலந்து கொள்வோர் என அனைத்தும் போட்டோ மற்றும் விடீயோ மாநில அரசு சார்பில் எடுக்கப்பட்டு கண்காணிக்கப்படும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதை மீறி பெண் தலைவர்களின் பஞ்சாயத்து கூட்டங்களை ஆண்கள் நடத்தினால் அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு பதவி பறிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாயத்து தலைவர், எம்.எல்.ஏ, எம்பி மற்றும் மாநில அமைச்சர்கள் என பல்வேறு அரசியல் பதவிகளில் பெண்கள் அமர்த்தப்படத் துவங்கிய பின்பும் அவர்கள் ந்த தலையீடுகளும் இன்றி சுதந்திரமாக பணியாற்றும் சூழல் மிகக் குறைவாக நிலவுகிறது.

தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பல அரசியல் பதவிகளில் பெண்களுக்கு என குறிப்பிட்ட சதவிகித ஒதுக்கீடு கிடைத்த பின்பும் இந்த நிலை நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தொடர்வதாகக் கருதப்படுகிறது.

இதற்கு முடிவு கட்டும் விதத்தில் பிரதமர் மோடி எடுத்த முயற்சியை முதல் மாநிலமாக ம.பியில் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அமுல்படுத்தி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x