Last Updated : 21 Oct, 2014 07:04 PM

 

Published : 21 Oct 2014 07:04 PM
Last Updated : 21 Oct 2014 07:04 PM

நிலக்கரி சுரங்கங்களை கையகப்படுத்தும் அவசர சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

1993-ஆம் ஆண்டு முதல் 214 நிறுவனங்களுக்குச் செய்த நிலக்கரிச் சுரங்கங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டதையடுத்து அந்தச் சுரங்கங்களை இ-ஏலம் விடுவதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வந்தது.

இந்நிலையில் இடது சாரிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவை, நாட்டின் கனிம வளங்களை தனியாருக்குத் தாரை வார்ப்பதா என்று நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், நிலக்கரிச் சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடும் அவசரச் சட்டத்தை மத்திய அமைச்சரவை இயற்றியது. அதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதலும் அளித்துள்ளார்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், 214 சுரங்க ஒதுக்கீடுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதை அடுத்து, அந்த சுரங்கங்களைக் கையகப்படுத்தி, சுரங்க ஒதுக்கீடுகளை முறைப்படுத்துவதற்கு அவசர சட்டம் பிறப்பிக்க பிரதமர் தலைமையிலான அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு புகாரை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 1993-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட சுரங்க ஒதுக்கீடுகளை சட்ட விரோதம் என அறிவித்தது. மொத்தம் வழங்கப்பட்ட 218 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளில் 214 ஒதுக்கீடுகளை ரத்து செய்தது. இதனால், அந்த சுரங்கங்களை மறு ஒதுக்கீடு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதனிடையே இப்பிரச்சினை தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

எரிசக்தித் துறை சீர்திருத்தங்களின் முதல் படியாக இந்த அவசரச் சட்டம் தற்போது இயற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் என்.டி.பி.சி. அல்லது மாநில மின்சார வாரியங்களுக்கும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் சிமெண்ட், ஸ்டீல், மின்சாரத் துறையில் இயங்கி வரும் தனியார் நிறுவனங்களுக்கும் போதிய நிலக்கரிச் சுரங்கங்கள் இ-ஏலம் மூலம் விடப்படும்.

இது குறித்து அருண் ஜேட்லி நேற்று கூறியபோது, “நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டதால் மின்சாரம், இரும்பு மற்றும் சிமென்ட் உள்ளிட்ட தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் நிலக்கரி உபரியாக இருந்த போதும், இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. சுரங்கங்களை மறு ஒதுக்கீடு செய்ய அவசர சட்டம் கொண்டு வரப்படும்.

மறு ஒதுக்கீடு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் நிறைவடையும். அவசர சட்டத்தின் மூலம் புதிய ஒதுக்கீடுகளில் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

சிமென்ட், இரும்பு, மின்சார உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களும் கவனத்தில் கொள்ளப்படும். அந்நிறுவனங்கள் விண்ணப்பித்தால் மின்னணு ஏல முறையில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

சுரங்க ஒதுக்கீடு வெளிப்படையாக நடைபெறும். அனைத்து ஏல நடவடிக்கைகளும் மாநில அரசு மூலமாகவே நடைபெறும்.

ஜார்க்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் இந்த புதிய கொள்கையால் பெருமளவு பயன்பெறும். கிழக்கு மாநிலங்கள் நிதிசார்ந்து மேம்படும்.

பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்துக்கு இக்கொள்கையால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிலக்கரிச் சுரங்க முறைகேட்டில் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் தவிர மற்ற நிறுவனங்கல் ஏலத்தில் பங்கேற்க அனுமதி உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x