Published : 17 Mar 2015 04:05 PM
Last Updated : 17 Mar 2015 04:05 PM
மேற்குவங்கத்தில் கன்னியாஸ்திரி பலாத்காரம், ஹரியாணாவில் தேவாலயம் மீது தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களை முன்வைத்து, சிறுபான்மையினர் மீதான மத வன்முறைகள் குறித்து மத்திய அரசுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.
இதன் காரணமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் செவ்வாய்க்கிழமை கடும் அமளி ஏற்பட்டது.
மக்களவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகோய், "அரசியல் சாசனப் பதவியில் இருப்பவர்களே மக்கள் மனதை காயப்படுத்தும் வகையில் கருத்துகளை தெரிவிக்கின்றனர்.
ஹரியாணாவில் ஒரு வழிபாட்டுத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அசாம், மேற்குவங்கத்தில் நடைபெற்றுள்ள சம்பவங்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.
இவை அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் சம்பவங்களாக இருந்தாலும் திரும்பத் திரும்ப நடைபெறுகிறது. நாட்டு மக்களில் பெரும்பாலோனோர் அச்ச உணர்வுடன் வாழும் சூழல் உருவாகியுள்ளது.
மும்பையின் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஒருவர் சிறுபான்மையினர் பாதுகாப்பு தொடர்பாக அச்சம் தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது. நடப்பதெல்லாம் சரியா? நாட்டில் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பு உள்துறை அமைச்சகத்துக்கு இல்லையா?" என கேள்வி எழுப்பினார்.
அதிமுக வலியுறுத்தல்
அதிமுக எம்.பி.வேணுகோபால் பேசும்போது, "இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. எங்கள் கட்சி மதச்சார்பின்மை கொள்கையை ஆதரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே போற்றி புகழ்வதை மக்கள் நிறுத்த வேண்டும்" என்றார்.
திரிணமூல் எம்.பி. சவுகதா ராய் கூறும்போது, "நாட்டில் நிலவும் மதவாத கருத்துகளே இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற காரணம்" என்றார்.
'வாக்கு வங்கி அரசியல் செய்யாதீர்'
மக்களவையில், மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் சரமாரியாக குற்றம்சாட்டிய நிலையில் அமைச்சர் வெங்கய்ய நாயுடு பதிலளித்தார். அப்போது அவர், "நாட்டில் அனைத்து மக்களுக்கும் சம நீதி கிடைக்க மோடி அரசு வழிவகை செய்கிறது. மோடி அரசு கன கச்சிதமாக இயங்குகிறது. இங்கு குறைகூறுபவர்கள் வாக்கு வங்கி அரசியல் செய்ய முற்படுகிறார்கள்" என்றார்.
மாநிலங்களவையிலும் அமளி:
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மசூதிகளை இடிப்பது தொடர்பாக கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் கடும் அமளி நிலவியது.
ராஜ்யசபா இன்று கூடியதும் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் காங்கிரஸ் கட்சியின் பிரமோத் திவாரி, மசூதிகளை இடிப்பது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட அவையின் துணைத் தலைவர் குரியன், இது தொடர்பாக விவாதிக்க அவை அனுமதி பெறுமாறு கூறினார். ஆனால், காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, குவாஹாட்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, "மசூதி என்பது மத வழிபாட்டு தலமல்ல. அது வெறும் கட்டடம் மட்டுமே. அதை எந்த நேரத்திலும் இடிக்க முடியும்.
சவுதி அரேபியவில் சாலைகள் அமைக்க சில மசூதிகள் இடிக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக என்னுடன் யாராவது விவாதிக்க விரும்பினால், அதற்கு நான் தயார்" என கூறியதாக தகவல்கள் வெளியாகின.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT