Published : 24 Oct 2013 10:12 PM
Last Updated : 24 Oct 2013 10:12 PM
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெங்காய விலை, கிலோவுக்கு ரூ.100 ஆக நீடிக்கும் நிலையில், இந்த விலையேற்றம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
வெங்காய விலை கடுமையாக அதிகரித்துள்ளது குறித்து பொருளாதார விவகாரங்களுக்கான பிரதமரின் ஆலோசனைக்குழு தலைவர் சி.ரங்கராஜன் கூறுகையில், “வெங்காயமோ மற்ற காய்கறிகளோ எதுவாக இருப்பினும் அவற்றின் விலை உயர்வுக்கு விநியோக தரப்பிலுள்ள பிரச்னைகள்தான் காரணம்.
பொருள்களின் அளிப்பை அதிகரித்தல், சந்தைச் செயல்பாடுகளை மேம்படுத்துதல், தற்போதுள்ள பொருள்கள் சமமாக நுகர்வோருக்கு விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்தல் உள்ளிட்ட விநியோகத் தரப்பு சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
வெங்காய விலை உயர்வு நீண்ட நாள்களுக்கு நீடிக்காது. தற்காலிகமானதுதான். எப்போதுமே தற்காலிக விலைவாசி உயர்வு இருந்து கொண்டே இருக்கும். ஆனால், பொருள்களின் வரத்து அதிகரித்து விட்டால், விலை குறைந்து விடும்” என்றார் அவர்.
உயர்நிலைக் கூட்டத்தில் முடிவு
வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் தலைமையிலான உயர்நிலை அளவிலான குழு கூட்டத்தில், கன மழையால் வெங்காய உள்ளிட்ட சாகுபடிப் பயிர்கள் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிர மாநிலத்துக்கு மத்திய அரசு ரூ.921.98 கோடி இழப்பீடு ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது. தேசிய பேரிடர் மேலாண்மை நிதித் தொகுப்பிலிருந்து இத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதியமைச்சர் ப.சிதம்பரம், உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
வெங்காய விலை எப்போது குறையும்?
வெங்காய தட்டுப்பாடு தற்காலிகமானது. அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் விலை குறையும் என எதிர்பார்க்கிறோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “வெங்காய தட்டுப்பாடு என்பது தற்காலிகமானதுதான். கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களில் கனமழையால் வெங்காயப் பயிர்கள் பாதிக்கப்பட்டன. கடந்த ஆண்டை விட சாகுபடிப்பரப்பு அதிகரித்துள்ளது. எனவே, எதிர்பார்க்கப்பட்ட உற்பத்தியில் வீழ்ச்சி இருக்காது.
அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் மகாராஷ்டிரம், கர்நாடகம், ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்து வெங்காய வரத்து அதிகரிக்கும் என்பதால், விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகசூல் நன்றாகவே இருக்கிறது. ஆனால் சந்தைக்கு வெங்காயம் எப்போது வரும் என்பதுதான் இப்போதைய கேள்வி.
நாசிக்கில் வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ. 45 மட்டுமே கிடைக்கிறது. ஆனால், சில்லறை விற்பனையில் எப்படி ரூ. 90க்கு விற்பனையாகிறது என்பது எனக்குப் புரியவில்லை. அரசாங்கம் வெங்காயத்தைக் கட்டுப்படுத்தவும் இல்லை, விற்பனை செய்யவுமில்லை. விலை, சந்தையால் நிர்ணயிக்கப்படுகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT