Published : 19 Feb 2014 12:00 AM
Last Updated : 19 Feb 2014 12:00 AM

இத்தாலி கடற்படை வீரர்கள் வழக்கு விசாரணை 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கேரள கடற்பகுதியில் 2 மீனவர்களை சுட்டுக்கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள 2 இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கு விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.

கடற்கொள்ளை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்தினால் எழும் சச்சரவுகள் தொடர்பாக தனது நிலை என்ன என்பதை தெளிவுபடுத்தும்படி நீதிபதி பி.எஸ்.சௌகான் தலைமையிலான அமர்வு மத்திய அரசுக்கு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது

வரும் 24-க்குள் இதற்கான பதிலை தெரிவிக்கும்படியும் அது உத்தரவிட்டது. அரசின் முடிவு தெரிந்தால்தான் இந்த வழக்கை தீர்க்க முடியும் என்றும் அமர்வு தெரிவித்தது.

‘இந்த விவகாரத்தில் சட்ட அமைச்சகத்தின் கருத்து கோரப்பட்டுள்ளது. வெள்ளிக் கிழமைக்குள் அது கிடைத்துவிடும்’ என அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி தெரிவித்தார்.

இத்தாலி அரசு மற்றும் கடற்படை வீரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹட்கி ஆஜரானார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே மத்திய அரசு முடிவு எடுக்கும் வரையில் இத்தாலி வீரர்களை நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்றார் ரோஹட்கி. ‘வரும்

24-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வோம். அப்போது இந்த கோரிக்கையை விசாரிப்போம்’ என்று உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

கடல் மண்டல சட்டம், இந்திய குற்றவியல் சட்டம், கிரிமினல் தண்டனை சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தபோதிலும் அதற்கு மாறாக பயங்கரவாத சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது என இத்தாலி அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

இத்தாலி தூதர் டேனியல் மான்சினி, கடற்படை வீரர்கள் மாசிமிலியானோ லத்தோர், சால்வடோர் ஜிரோன் ஆகியோர் கூட்டாக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் துரித நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கும் தேசிய புலனாய்வு அமைப்புக்கும் உத்தரவிட வேண்டும் அல்லது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு வீரர்களையும் விடுவிக்க உத்தரவிட வேண்டும் என இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.,

சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தை இந்த வழக் கில் பயன்படுத்தினால் அது இத்தாலியை தீவிரவாத நாடு போல சித்திரிப்பதாக அமையும் என்பதால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என இத்தாலி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கேரள கடற்பகுதியில் 2012 பிப்ரவரி 15ம் தேதி என்ரிகா லெக்ஸி என்ற கப்பல் சென்றபோது, அதன் அருகே மீன்பிடித்த 2 பேரை, கடற்கொள்ளையர்கள் என சந்தேகித்து லத்தோர், ஜிரோன் இருவரும் சுட்டுக்கொன்றது தொடர்பானது இந்த வழக்கு. 2012 பிப்ரவரி 19ம் தேதி அந்த இரு வீரர்களும் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x