Published : 19 Jan 2014 12:54 PM
Last Updated : 19 Jan 2014 12:54 PM

காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: குடியரசு தின விழாவை சீர்குலைக்க சதி?

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் சனிக்கிழமை முறியடித்தது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "சனிக்கிழமை காலை 8.30 மணி அளவில் கிருஷ்ணகாட்டி என்ற இடத்தில் இந்தியப் பகுதிக்குள் (150 மீட்டர்) மூன்று அல்லது நான்கு தீவிரவாதிகள் நடமாடியது தெரியவந்தது.

இதையறிந்த நமது வீரர்கள் எல்லையை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் அவர்கள் காட்டுப் பகுதிக்குள் சென்று விட்டனர். கடந்த 6 நாள்களில் 2-வது முறையாக ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது" என்றார்.

குடியரசு தினம் வரவுள்ள நிலையில் அதை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தீவிரவாதிகள் ஊடுவல் முயற்சி அதிகரிக்கும் என பல்வேறு உளவு அறிக்கைகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், இரு நாடுகளின் பிரிகேட் கமாண்டர் நிலை அதிகாரிகளின் கூட்டம் பூஞ்ச் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, எல்லையில் ஊடுருவல் அதிகரித்து வருவது குறித்து பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இந்திய தரப்பு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

20 இந்திய லாரிகள் சிறைபிடிப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் மற்றும் அதன் ஓட்டுநர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை விடுவிக்க வேண்டுமானால், ஜம்மு காஷ்மீர் போலீஸாரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள லாரியையும் அதன் ஓட்டுநரையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து வந்த ஒரு லாரியை உரி நகரில் உள்ள சலாமாபாத் வர்த்தக மையத்தில் காஷ்மீர் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு சிறைபிடித்தனர்.

அதிலிருந்து ரூ.100 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுவிஷயத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோரிக்கையை ஏற்கப் போவதில்லை என பாராமுல்லா மாவட்ட காவல் துறை துணை ஆணையர் ஜி.ஏ.க்வாஜா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x