Published : 26 Dec 2015 12:19 PM
Last Updated : 26 Dec 2015 12:19 PM
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திடீர் பயணமாக பாகிஸ்தான் சென்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க பயணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் பயணத்துக்கு அடித்தளமாக இருந்த பாரீஸ் பருவநிலை மாநாட்டின்போது நடந்த இந்திய - பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பு குறித்த தகவல்கள் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு கிடைத்துள்ளன.
கடந்த நவம்பர் 30-ம் தேதி பாரீஸ் பருவநிலை மாநாட்டின்போது இந்தியா - பாகிஸ்தான் பிரதமர்கள் சந்தித்துக் கொண்டனர். 3 நிமிடங்களுக்கும் குறைவாகவே இந்தச் சந்திப்பு நடந்தது. ஆனால், இந்தச் சந்திப்புதான் வரலாற்றுப் பக்கத்தில் இடம்பிடித்துள்ள மாற்றத்தை ஏற்படுத்தும் என யாரும் அறிந்திருக்கமாட்டார்கள்.
பாரீஸ் மாநாட்டில் அந்த மூன்று நிமிடத்தில் மோடியும், நவாஸ் ஷெரீபும் அப்படி என்னதான் பேசினார்கள்? அந்த சந்திப்பு முடிந்த பின்னர் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ட்விட்டரில், 'இது மரியாதை நிமித்தான சந்திப்பு' எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், 'தி இந்து'வுக்கு (ஆங்கிலம்) கிடைத்துள்ள தகவலின்படி சந்திப்பின்போது ஒவ்வொரு நொடிப்பொழுதும் இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை திரும்ப துவக்குவது குறித்தே இருந்தது.
இது தொடர்பாக மோடி- நவாஸ் சந்திப்பின்போது உடன் இருந்த பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமரிடம், 'நாம் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது' எனச் சொல்லிக்கொண்டே அவரை நெருங்கினார். அதற்கு ஷெரீப் நாம் அமர்ந்து கொண்டே பேசலாமே என்றார்".
ஷெரீப் பேச்சுவார்த்தையை திரும்பத் தொடங்க வேண்டும் என்றே தானும் விரும்பியதாகவும், ஆனால் தேசிய ஆலோசகர்கள் அளவிளான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது அடுத்தகட்டத்துக்கு முன்னேற முட்டுக்கட்டையாக இருந்ததாகவும், அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் எந்த முன் நிபந்தனையும் இல்லாமல் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் எனவும் கூறினார்.
உஃபா சந்திப்பின்போது காஷ்மீர் பிரச்சினை குறித்து விவாதிக்க இந்தியா இசைவு தெரிவிக்காத நிலையில், பாரீஸ் சந்திப்பின்போது காஷ்மீர் பிரச்சினை குறித்த விவாதத்துக்கும் மோடி ஒப்புதல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், வெளியுறவுச் செயலர்கள் சந்திப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதுதான் நடந்தது, மற்றது வரலாறு" என அந்த அதிகாரி கூறினார்.
பாங்காக் வெற்றி
இஸ்லாமாபாத்தில் நடந்த ஆசியாவின் இதயம் மாநாட்டில் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொள்வது குறித்தும் பாரீஸ் மாநாட்டில் இந்திய - பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக இந்திய, பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பாங்காக்கில் கடந்த 6-ம் தேதி சந்தித்துப் பேசினர். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நசீர்கான் ஜன்ஜுயா ஆகியோர் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சந்தித்துப் பேசினர். அப்போது இருநாடுகளின் வெளியுறவுச் செயலாளர்களும் உடன் இருந்தனர்.
இந்தச் சந்திப்பு குறித்து மற்றொரு அதிகாரி கூறும்போது, ''பாரீஸ் மாநாட்டு சந்திப்புக்குப் பிறகு இந்திய - பாகிஸ்தான் உறவில் ஆக்கபூர்வ நிகழ்வுகள் நடைபெறத் தொடங்கின. அதில் ஒன்றே பாங்காக் சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது. இந்த சந்திப்புக்கான ஏற்பாடு நடந்த போது சம்பந்தப்பட்ட நான்கு பேருமே (அஜித் தோவல், ஜன்ஜூயா, ஜெய்சங்கர், அஜீஸ் அகமது) வெளிநாடுகளில் இருந்தனர். அனைவரும் சந்தித்துக் கொள்ள சாத்தியம் உள்ள இடமாக பாங்காக் இருந்தது. அங்கு செல்ல விசா தேவையில்லை என்பதால் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டது" என்றார்.
இந்தியா முன்னெடுத்த பேச்சுவார்த்தை:
பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை இந்தியாவே முன்னெடுத்துள்ளது. 4 முறை இதற்கான முயற்சியை இந்தியா மேற்கொண்டதாகத் தெரிகிறது. முதலில், கடந்த ஜனவரியில் மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது. இரண்டாவது, சார்க் மாநாட்டின்போது பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் சென்றது, மூன்றாவது ரஷ்யாவின் உஃபா நகரில் நடந்த சந்திப்பு, 4-வது நியூயார்க்கில் பாகிஸ்தான் பிரதமருடனான சந்திப்புக்கு இந்தியா கோரியது ஆகும்.
எனவே இந்த ஆண்டு தேசிய ஆலோசகர்கள் அளவில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை தடைபட்டது எதிர்பாராதவிதமாக நடந்ததேதவிர பிரதமரின் பாகிஸ்தான் கொள்கையல்ல என மூத்த அதிகாரி ஒருவர் 'தி இந்து'விடம் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT