Published : 06 Sep 2016 06:13 PM
Last Updated : 06 Sep 2016 06:13 PM

முழு மதுவிலக்கு அமலுக்குப் பிறகு பிஹாரில் என்ன நடக்கிறது?

முழு மதுவிலக்கு அமலில் இருந்தாலும், கடுமையான கண்காணிப்பு, தண்டனைகள் இருந்தும், மற்ற மாநிலங்களிலிருந்து பிஹாருக்குள் மது கடத்தப்பட்டு வருகிறது.

பிஹார் மது விலக்கின் விளைவு என்ன? கீழ்கண்டவற்றில் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் என்று ஒரு சோதனை வைத்தால் அதற்கான 5 விடைகள் இதோ: பிஹாரின் முழு மதுவிலக்கினால் சிறிய குற்றவாளிகள் வேலையில்லாதோர் புதிய வழியில் பணம் ஈட்ட சட்ட விரோத வழி ஏற்பட்டுள்ளது.

2. முழு மதுவிலக்கினால் சிறைகள் நிரம்பி வழிகின்றன.

3. மது அருந்தியவர்கள் மதுவிலக்கினால் அபாயகரமான மாற்று வழிகளில் செல்வது.

4. கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் நிறுவன கூட்டங்களை பிஹாரில் ஒரு போதும் நடத்தப்போவதில்லை என்று முடிவெடுத்தது.

5. மேற்கூறிய அனைத்தும்.

மேற்கூறிய 5 விடைகளில் எது சரியான விடை என்றால் ஐந்தாவதாக உள்ள அனைத்துமே என்பதுதான் சரியான விடையாக இருக்க முடியும்.

ஜார்கண்ட், உ.பி., மேற்கு வங்கம், ஆகிய மாநிலங்களிலிருந்து மதுக்கடத்தப்பட்டு கொண்டு வரப்படுவதோடு, நேபாளம், வங்கதேசம் என்று நாட்டின் எல்லை கடந்த கடத்தலும் தொடங்கியுள்ளது. இத்தகைய வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுவதை நம்ப வேண்டுமென்றால், “அதிக ரிஸ்க் இல்லாத, உயர்ந்த லாபம் அளிக்கும் பிசினஸ் இதுதான்.”

இது குறித்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு தெரிவித்த தீபக் பாண்டே (பெயர் மாற்றப்பட்டுள்ளது), “மதுபானங்கள் பறிமுதல், கைது என்ற செய்திகளெல்லாம் மொத்த வர்த்தகத்தில் 1% என்பது குறிப்பிடத்தக்கது” என்றார்

இதே பெயர் மாற்றப்பட்ட பாண்டே என்பவர் மாஞ்சியில் உள்ள வேலையில்லாத இளைஞர். இவர் உ.பி. எல்லைக்கு 3 கிமீ அருகில் வசித்து வருகிறார், தற்போது பிஹாருக்குள் கள்ளத்தனமாக சரக்கைக் கொண்டு வருவதற்காகவே பைக் வாங்கியுள்ளார் என்றால் வியாபாரம் எப்படி ஜோராக நடைபெறுகிறது என்பதை அறுதியிட முடிகிறது.

“நாங்கள் பிரதான சாலைகளை தவிர்த்து, கிராமங்கள் வழியாக எல்லைகளைக் கடக்கிறோம்” என்கிறார் பாண்டே. எல்லைப்புற கிராமங்களில் முழு மதுவிலக்கிற்குப் பிறகு சிறு குற்றங்கள் குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது, இவர்கள் தற்போது மதுபான கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே பிஹார் மாநில எக்சைஸ் வரித் துறையினர் எல்லை கிராமங்களை கண்காணிக்க 194 ரோந்து இருசக்கர வாகனங்களை வாங்கியுள்ளனர்.

மதுவிலக்கு அமலான பிறகு சுமார் 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 1.2 லட்சம் லிட்டர்கள் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே 4,100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிஹாரில் உள்ள 58 சிறைகளின் ஒட்டுமொத்த கொள்ளளவு 37,809. சிறையில் இட நெருக்கடி அதிகரித்து வருகிறது.

முழு மதுவிலக்கினால் சிலர் மேலும் அபாயகரமான பழக்கங்களான போதை வஸ்துகளுக்கும், இருமல் மருந்துகள், கஞ்சா, பாங், ஹெராயின் ஆகியவற்றை நோக்கி சென்றுள்ளனர். முன்னதாக மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்ட பலர் சோப் பார்களை தின்ற செய்திகளும் வெளியாகின.

“சில இளைஞர்கள் ஃபோர்ட்வின் என்ற ஊசி மருந்தை எடுத்துக் கொள்கின்றனர், இது ரூ.7 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது” என்கிறார் மற்றொரு நபர்.

ஹோட்டல் தொழில்துறைக்கு 30% நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறும்போது, “கடந்த 4 மாதங்களில் எந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனமும் தங்கள் நிறுவன கூட்டங்களை இங்கு நடத்துவதில்லை. முன்பெல்லாம் வாரத்துக்கு ஒரு கூட்டம் நடக்கும். தற்போது கொல்கத்தா, ராஞ்சியில் நடத்துகின்றனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x