Published : 13 Apr 2017 07:24 AM
Last Updated : 13 Apr 2017 07:24 AM

நடிகர் கலாபவன் மணி மர்ம மரணம்: சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் மணியின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் கலாபவன் மணி. கடந்த ஆண்டு காலக்குடி ஆற்றங்கரையில் உள்ள தனது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்ற கலாபவன் மணிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலாபவன் மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதே சமயம் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சகோதரர் ராமகிருஷ்ணன் சந்தேகம் எழுப்பினார். இதைத் தொடர்ந்து கலாபவன் மணியின் உடலை கொச்சியில் உள்ள ஆய்வகத்தில் சோதனை செய்தபோது, அவரது உடலில் குளோரோபைரிபாஸ் என்னும் பூச்சிக் கொல்லி மருந்து, கலந்திருப்பது தெரிய வந்தது. பின்னர் ஹைதராபாத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அதில் மெத்தனால் கலந்திருப்பது தெரியவந்தது. ஆனால் போலீஸ் தரப்பில் கல்லீரல் பாதிக்கப்பட்டதே கலாபவன் மணியின் மரணத்துக்கு காரணம் என கூறப்பட்டது. இதனால் கலாபவன் மணியின் மரணத்தில் மர்மம் நீடித்தது.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன், மர்ம மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தார். மேலும் கேரள உயர் நீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் கலாபவன் மணி மரணம் தொடர்பாக ஒரு மாதத்துக்குள் சிபிஐ தனது விசாரணையை தொடங்க வேண்டும் என உத்தரவிட்டது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை கலாபவன் மணியின் மனைவியும் அவரது குடும்பத்தினரும் வரவேற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x