Published : 19 Mar 2014 09:06 AM
Last Updated : 19 Mar 2014 09:06 AM

ஊழலற்றவர் என்று மோடி பற்றி சொல்லவில்லை: விக்கிலீக்ஸ் இணையதளம் கருத்து

நரேந்திர மோடி ஊழலற்றவர் என்று விக்கிலீக்ஸ் இணையதளம் முன்பு தெரிவித்திருந்ததாக கூறப்பட்டது. ஆனால், தான் அவ்வாறு எதையும் கூறவில்லை என்று இப்போது அந்த இணையதளம் மறுத்துள்ளது. பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் அனுப்பிய ரகசிய தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது.

2006-ம் ஆண்டு மும்பையில் பணியாற்றிய அமெரிக்க தூதரக அதிகாரி மிச்சேல் எஸ்.ஓவன், மோடியின் தலைமைப்பண்பு பற்றி அமெரிக்க அரசுக்கு அனுப்பிய தகவல் பற்றி விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது. அப்போது நரேந்திர மோடியை ஊழலற்றவர் என்று மிச்சேல் எஸ.ஓவன் கூறியதாக தகவல் வெளியானது.

ஆனால், விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் அதுபோன்று மோடி ஊழல் செய்யாதவர் என்ற கருத்து எதுவும் இடம்பெறவில்லை என்று விக்கிலீக்ஸ் இணையதளம் இப்போது விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் இணையதளத்தில் விக்கிலீக்ஸ் கூறியுள்ளதாவது: நாங்கள் வெளி யிட்ட ஆவணங்கள் எதிலும், மோடி ஊழலற்றவர் என்ற வாசகம் இடம்பெறவில்லை. ஊழலற்ற வராக பரவலாக பார்க்கப்படுகிறார் என்றுதான் உள்ளது.

அவர் ஊழலற்றவர் என்ற கருத்தை குஜராத்தின் ராஜ் கோட்டைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் மனோகர்சின்ஹ் ஜடேஜா தான் தெரிவித்திருந்தார்” என்று கூறப்பட்டுள்ளது. ஊழல் செய்யாத மோடியை பார்த்து அமெரிக்காவே பயப்படுகிறது என்று விக்கிலீக்ஸ் நிறு வனர் அசாஞ்சே கூறியதாக பாஜகவினர் பிரச்சாரம் செய்து நன்கொடைகளை வசூலித்து வந்தனர். இதற்கு விக்கிலீக்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அசாஞ்சே அதுபோன்ற கருத்து எதையும் கூறவில்லை என்று அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

விக்கிலீக்ஸின் இந்த கருத்துகள் தொடர்பாக பாஜக தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது: மோடியை பற்றி அறிந்து கொள்ள விக்கிலீக்ஸ் அல்லது அசாஞ்சேவிடம் நற்சான்றிதழ் பெறத் தேவையில்லை” என்றார்.

2006-ம் ஆண்டு அமெரிக்க தூதரகம் சார்பில் அனுப்பப் பட்டதாக கூறப்பட்ட ஆவணத்தில் இடம் பெற்ற தகவல்கள்: “மோடி தேசிய அரசியலில் ஈடுபட்டால், அது நல்லதா, கெட்டதா என்பதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. பொதுவாக மோடி அனைவராலும் விரும்பக் கூடிய நபராக இருக்கிறார். ஆனால், அதே சமயம், நம்பகத்தன்மை இல்லாதவராகவும் இருக்கிறார். பயம் மற்றும் அச்சுறுத்தலின் பேரில் மோடி ஆட்சி அதிகாரத்தை செலுத்துகிறார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, ஒருமித்த கருத்து என்ற அடிப்படையில் அல்ல.

எனினும், அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்து சேர்த்ததாக புகார் ஏதும் இல்லை. அரசின் கீழ் நிலையிலும், நடு நிலையிலும் உள்ள ஊழலை அவர் ஒழித்துவிட்டார். ஆனால், உயர் நிலையில் நடைபெறும் ஊழல் குறையவில்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x