Published : 17 Oct 2014 11:22 AM
Last Updated : 17 Oct 2014 11:22 AM
பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளான ஹிஜுபுல் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பாவுடன் இணைந்து இந்திய நகரங்கள் மீது தாக்குதல் நடத்த அல்-காய்தா சதித் திட்டம் தீட்டியுள்ளது என்று தேசிய பாதுகாப்புப் படையின் (என்.எஸ்.ஜி) தலைமை இயக்குநர் ஜெயந்த் சவுத்ரி தெரிவித்தார்.
டெல்லிக்கு அருகில் மானேஸரில் அமைந்துள்ள என்.எஸ்.ஜி.யின் தலைமை முகாமில் அந்த அமைப்பின் 30-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் அல்-காய்தா தனது முகாமை அமைக்க முயல்வது அனைவருக்கும் தெரிந்த செய்திதான். லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஜுபுல் முஜாகிதீன் ஆகிய தீவிரவாத அமைப்புகளுடன் இணைந்து இந்தியாவில் முகாம் அமைக்க பல மாதங்களாக அல்-காய்தா முயன்று வருவது இப்போது தெரியவந்துள்ளது.
கோவா மற்றும் அமிர்தசரஸ், பெங்களூர் உள்ளிட்ட பெருநகரங்கள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த அவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். அவர்களின் பன்முக தாக்குதலை சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும் எனக் கூறினார்.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் தாக்குதல் நடத்த அல்-காய்தா திட்டமிட்டு வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் மற்றும் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் பர்த்வான், உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோரில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதை உளவுத் துறையினர் சுட்டிக் காட்டியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT