Published : 29 Apr 2017 09:48 PM
Last Updated : 29 Apr 2017 09:48 PM
பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் நிரப்பும் எந்திரத்தில் ரிமோட் கண்ட்ரோலால் இயக்கக்கூடிய மைக்ரோ சிப் ஒன்றைப் பொருத்தி பெட்ரோல் அளவில் மோசடி செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றும் ஒரு நெட்வொர்க்கை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
உத்திரப் பிரதேச மாநிலத்தின் சிறப்புப் போலீஸ் படையினர் இன்று தலைநகர் லக்னோவில் ரெய்டு நடத்தி இவ்வாறு எலெக்ட்ரானிக் சிப் பொருத்தி வாடிக்கையாளர்களை ஏமாற்றிய 13 பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள், மேனேஜர்கள், தொழில்நுட்பர்கள் என்று 23 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். 7 பெட்ரோல் நிலையங்களை இந்த போலீஸ் படையினர் ரெய்டு செய்து 15 எலெக்ட்ரானிக் சிப்கள், 29 ரிமோட் கண்ட்ரோலர்களை கைப்பற்றியுள்ளனர்.
போலீஸார் இது பற்றி கூறும்போது, பெட்ரோல் போடும் மெஷினில் பழுது பார்க்கப்படுவதான பெயரில் அதனுள் இந்த மைக்ரோ சிப்பை பொறுத்தும் பணிதான் நடைபெற்றுள்ளது. எலெக்ட்ரீசியன் மூலம் மைக்ரோசிப் பெட்ரோல் போடும் எந்திரத்தினுள் பொருத்தப்படுகிறது. இந்தச் சிப்பை பெட்ரோல் நிலைய உரிமையாளர்கல் ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தலாம். போலீஸ் ரெய்டு என்றால் இருந்த இடத்திலிருந்து சுவிட்ச் ஆஃப் செய்து விடலாம்.
இந்த சிப்கள் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் அவருக்கு கணக்கு மட்டும் சரியாகக் காட்டும், ஆனால் உள்ளுக்குள் 5%-10% பெட்ரோல் குறைவாகவே நிரப்பப்பட்டிருக்கும், எனவே வாடிக்கையாளர்களுக்குத் தான் ஏமாற்றப்படுகிறோம் என்பதே தெரிய வாய்ப்பில்லை.
சிறப்பு அதிரடிப்படையின் உயரதிகாரி அமித் பதக் கூறும்போது, இத்தகைய சட்டவிரோத மோசடி சிப்கள் மூலம் பெட்ரோல் நிலையம் ஒன்று மாதத்திற்கு வாடிக்கையாளர்களின் பெட்ரோல் அளவில் ஏமாற்றி சராசரியாக ரூ.6 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர். மிகப்பெரிய பெட்ரோல் நிலையங்கள் இப்படி மோசடி செய்து மாதம் ரூ.12 லட்சம் வரை ஈட்டுகின்றனர், என்று அதிர்ச்சிக் குண்டு ஒன்றை போட்டார்.
இதனையடுத்து உ.பி டிஜிபி தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் டிஜிபி சுல்கான் சிங் இது குறித்து ஒரு குழு ஒன்று அமைத்து பெட்ரோல் நிலையங்களை சீரான முறையில் கண்காணிக்க உத்தரவிட்டதோடு சிப்களை பொறிக்குள் அமைக்கும் கும்பலையும் கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஊழல் கண்டுபிடிப்பு குறித்து மத்திய இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சிறப்பு போலீஸ் படையினரை பாராட்டியுள்ளார். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT