Published : 08 Jan 2014 09:00 AM
Last Updated : 08 Jan 2014 09:00 AM

வெளிநாடுகளில் வாழும் இந்திய இளைஞர்களுடன் கூட்டு சேருங்கள்: மத்திய அமைச்சர் வயலார் ரவி அழைப்பு

வெளிநாடுகளில் வாழும் இந்திய இளைஞர்களுடன் இந்தியாவில் உள்ளவர்கள் தொடர்புகொண்டு நெருக்கமாக இருந்து பல்வேறு துறைகளில் கூட்டுசேர வேண்டும் என வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி வலியுறுத்தியுள்ளார்.

தொழில் துறையிலும் சமூகத் துறைகளிலும் வெளிநாடு வாழ் இந்திய இளைஞர்களுக்கும் இந்தியாவில் உள்ள இளைஞர் களுக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டால் வேலைவாய்ப்பு பெருகி நாடு வளம் கொழிக்க உதவும் என்றும் அவர் சொன்னார்.

வெளிநாடுவாழ் இந்தியர் தினத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து வயலார் ரவி பேசினார். இந்த நிகழ்ச்சியின் இந்த ஆண்டின் மையக்கருத்து இளைஞர்களுடன் நெருக்கம் என்பதாகும்.

இந்த நிகழ்ச்சியில் வயலார் ரவி பேசியதாவது: வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரம், வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் நல்ல வாய்ப்புகளை வழங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் ஏற்படும் கருத்துப் பரிமாற்றம் வெளிநாடுகளில் வசிக்கும் இளைஞர்களுக்கும் இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கும் இடையில் நல்ல உறவும் நெருக்கமும் ஏற்பட வழி செய்யும்.

உலகமயமாக்கல் கொள்கை காரணமாக தேசங்களுக்கு இடையில் வர்த்தக, வணிக ரீதியில் நல்ல பிணைப்பு காணப் படுகிறது. இந்தியாவில் உள்ள இளைஞர்களும் வெளிநாடுகளில் வாழும் இந்திய இளைஞர்களும் கரம் கோத்து தமக்குள் தொடர்பை வலுப்படுத்தினால் வர்த்தகம், தொழில், தொழில்முனைவாற்றல், சமூகப்பணிகளில் கூட்டு முயற்சிக்கு வழி கிடைக்கும். அப்போது வேலைவாய்ப்பு பெருகி நாடு செல்வ வளம் மிகுதியாகி மக்களுக்கு நன்மை கிடைக்கும்.

நமது உழைக்கும் மக்களில் பாதிப்பேர் 18லிருந்து 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். அவர்கள் நாட்டின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் பெரும் பங்களிக் கிறார்கள் என்றார் வயலார் ரவி.

பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாடுவாழ் இந்தியர் தினத்தை முறைப்படி புதன்கிழமை தொடங்கி வைக்கிறார். சிறப்பு விருந்தினராக மலேசிய இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஒ.பி.தாடுக் செரி பழனிவேல் பங்கேற்கிறார்.

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது:

நேரு யுவகேந்திரா, என்.எஸ்.எஸ். போன்ற வற்றுடன் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நெருக்கம் பெற வேண்டும். என்எஸ்எஸ் அமைப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக சிறப்பிடம் பெற்று குடியரசு தினத்தில் பங்கேற்க தேர்வான தொண்டர்கள் இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். அவர்களுடன் வெளிநாடுவாழ் இந்தியர்கள் கலந்துரையாட நல்ல வாய்ப்பு இது என்றார்.

ஜன. 9-ம் தேதி நடக்கும் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்று வெளிநாடுவாழ் இந்தியர் விருதுகளை வழங்குகிறார், இந்த முறை 14 பேருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x