Published : 13 Feb 2014 12:00 AM
Last Updated : 13 Feb 2014 12:00 AM

ரயில்களில் தீ விபத்தை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு

ரயில்களில் தீ விபத்துகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ரயில்வே இடைக்கால பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

2014-15-ம் நிதியாண்டில் ரயில்வே துறை ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படும். இதில் அதிகபட்சமாக சரக்கு போக்குவரத்து மூலம் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரத்து 770 கோடியும் பயணிகள் போக்குவரத்து மூலம் ரூ.45 ஆயிரத்து 200 கோடியும் மற்ற வகைகளில் ரூ.7 ஆயிரத்து 700 கோடியும் வருவாயாக கிடைக்கும்.

அடுத்த நிதியாண்டில் ரூ.64 ஆயிரத்து 305 கோடி முதலீடுகள் செய்ய திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.93, 554 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த இலக்கு ரூ.94,000 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைக்காலமாக ரயில்களில் தீ விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருவதால் தீ, புகையைக் கண்டறியும் கருவி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களில் சோதனை முயற்சியாக பொருத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் பயணிகள் ரயில்களில் அறிமுகம் செய்யப்படும்.

மேலும் எலெக்ட்ரிக் வயர்களுக்கு பல அடுக்கு பாதுகாப்பு, ஏ.சி. பெட்டிகளில் கையடக்க தீயணைப்புக் கருவிகள், பேண்ட்ரி களில் எல்பிஜி சிலிண்டருக்குப் பதிலாக எலெக்ட்ரிக் இன்டக்சன் ஸ்டவ்களை பயன்படுத்துவது ஆகிய திட்டங்களை செயல் படுத்தவும் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

இவை தவிர ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளில் ஆள்களை நியமிப்பது, ரயில்கள் மோதுவதை தடுக்கும் சாதனங்களைப் பொருத்து வது, கண்காணிப்பு கருவி மூலம் ரயில் டிரைவர்களின் எச்சரிக்கை நிலையை ஆய்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்த நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காற்றாலை, சூரிய மின்சக்தி நிலையங்கள்

ரயில்வே துறை சார்பில் பசுமைத் திட்டங்களும் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி காற்றாலை, சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 200 ரயில் நிலையங்கள், 2000-க்கும் மேற்பட்ட ரயில்வே கிராசிங்குகளில் இந்த பசுமைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. தற்போது 2500 ரயில்வே பெட்டிகளில் பயோ-டாய்லெட் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

ரயில்வே வரைபடத்தில் மேகாலயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வைஷ்ணவிதேவி கோயிலுக்குச் செல்லும் அடிவார முகாமான கத்ரா வரை மிக விரைவில் ரயில் சேவை தொடங்கப்படும். மேலும் இந்த நிதி ஆண்டிலேயே அருணாசல பிரதேச தலைநகர் இடா நகர் மற்றும் மேகாலயம் ஆகியவை ரயில்வே வரைபடத்தில் முதல்முறையாக இடம்பெறும்

இடாநகர் அருகே ஹர்முத்தி-நாகர்லாகன் பகுதிகளுக்கு இடையே புதிய ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வு விரைவில் தொடங்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x