Published : 20 Dec 2013 08:55 AM
Last Updated : 20 Dec 2013 08:55 AM
அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த விமான நிலையத்துக்கான 'பாஸ்' உள்ளிட்ட சலுகைகள் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் ரத்து செய்யப்பட்டன.
அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இந்திய விமான நிலையங்களில் எளிதில் சென்று வருவதற்காக சிறப்பு 'பாஸ்கள்' வழங்கப்பட்டிருந்தன.
இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய அரசு, டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகளை அகற்றியது.
அமெரிக்கத் தூதரகத்தால் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் அனைத்தும் விமான நிலையத்தில் உரிய சோதனைக்கு பிறகு விதிமுறைப்படியே அனுமதிக்கப்படும். முன்பு போல விரைவாக அனுமதியளிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விமான நிலையத்துக்கான 'பாஸ்களை' வியாழக்கிழமை நள்ளிரவுக்குள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அந்த காலக்கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, வியாழக்கிழமை நள்ளிரவு முதல், விமான நிலையத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
அதோடு, அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றும் இந்தியர்கள் குறித்த விவரங்கள், அவர்களுடைய வங்கிக் கணக்குகள், ஊதிய விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை டிசம்பர் 23-ம் தேதிக்குள் தர வேண்டும் என்று இந்திய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT