Published : 10 Dec 2013 10:20 AM
Last Updated : 10 Dec 2013 10:20 AM
பா.ஜ.க.வில் இணையும் எண்ணம் இல்லை என்று கர்நாடகத்தின் முன்னாள் முதல்வரும் கர்நாடக ஜனதா கட்சியின் தலைவருமான எடியூரப்பா பெங்களூரில் திங்கள் கிழமை தெரிவித்தார்.
பெங்களூரில் உள்ள நட்சத்திர விடுதியில் கர்நாடக ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் எடியூரப்பாவின் தலைமையில் திங்கள்கிழமை கூடியது. இதில் கட்சியின் செயல் தலைவர் ஷோபா கரந்தலஜே, முன்னாள் அமைச்சர்கள் ரேணுகாச்சார்யா, தனஞ்ஜெய குமார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது மீண்டும் பா.ஜ.க.வில் இணைவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில், கர்நாடக ஜனதாவை பா.ஜ.க.வில் இணைப்பது குறித்த முடிவை எடுக்கும் முழு அதிகாரத்தை எடியூரப்பாவிற்கு அளிப்பதாக தீர்மானம் நிறை வேற்றினர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறும் மற்ற கட்சிகளை போல கர்நாடக ஜனதா கட்சியும் கூட்டணியில் இடம் பிடிக்கலாமா என்று முதலில் விவாதிக்கப்பட்டது.அதன்பிறகு வருகின்ற நாடாளு மன்ற தேர்தலில் எத்தனை தொகு
திகளில் போட்டியிடலாம். பா.ஜ.க.வில் மீண்டும் இணைந்தால் எடியூரப்பாவிற்கும் மற்ற நிர்வாகிகளுக்கும் எந்த பதவியை கேட்கலாம் என்றும் விவாதித்தனர்.இறுதியாக எடியூரப்பாவுக்கு சட்டப்பேரவை எதிர்க் கட்சி தலைவர் பதவியும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார குழுத் தலைவர் பதவியையும் தர வேண்டும் என்றும் செயற்குழு கூட்டத்தில் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டத்துக்குப் பின் செய்தி யாளர்களிடம் எடியூரப்பா கூறியது:
'பா.ஜ.க.வில் என்னை சேருமாறு அதிகாரப்பூர்வமாக எனக்கு கடிதம் வரவில்லை.அதே போல நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்பது குறித்து அத்வானிக்கு எழுதிய கடிதத்துக்கும் இன்னும் பதில் வரவில்லை.எனவே மீண்டும் ஒருமுறை உறுதியாக சொல்கி றேன். பா.ஜ.க.வில் க.ஜ.க.வை இணைப்பது பற்றி வெளிவரும் தகவல்கள் அனைத்தும் தவ றானவை. எனது உடம்பில் தெம்பு இருக்கிறது. அதனால் இன்னும் 10 ஆண்டுகளுக்கு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை வளர்ப்பேன். கர்நாடக ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றும்வரை தீவிரமாக உழைத்துக்கொண்டிருப்பேன்'' என்றார்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம் ராஜ்நாத் சிங்கின் 'பகிரங்க அழைப்பு' குறித்து கேட்டதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
திடீர் மாற்றம் ஏன்?
கர்நாடகத்தில் 40 ஆண்டு களுக்கும் மேல் ஊர் ஊராக பயணம் செய்து பாரதிய ஜனதா கட்சியை வளர்த்தவர் எடியூரப்பா.அவரின் கடும் உழைப்பால் 2008ம் ஆண்டு தென்னிந்தியாவில் முதல்முறையாக கர்நாடகத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இதனால் அவருக்கு பா.ஜ.க. தலைவர்கள் மத்தியில் நல்ல மரியாதை இருக்கிறது.இதனால் தான் விரும்பியதை பா.ஜ.கவில் சாதித்து விடலாம் என எடியூரப்பா நம்புகிறார்.
2011-ம் ஆண்டு தனது மகன்க ளுக்கு கர்நாடக அரசின் நிலத்தை முறைகேடாக ஒதுக்கியதால் ஆட்சியை இழந்து சிறைக்குச் சென்றார். பா.ஜ.கவில் இருந்து வெளியேறி தனிக் கட்சி ஆரம்பித்தார். இந்நிலையில் கடந்த ஆட்சியில் லோக் ஆயுக்தா நீதிமன்றம் தன் மீது தொடர்ந்த 3 நில மோசடி வழக்குகளில் இருந்து தப்பிக்க மீண்டும் பா.ஜ.க.வில் சேர திட்டுமிட்டு இருக்கிறார்.
கர்நாடகத்தில் பெரும்பான்மை யாக வசிக்கும் லிங்காயத்து வகுப்பின் வாக்கு வங்கி முழு வதுமாக தன் வசம் இருப்பதால் தனது நிபந்தனையை பா.ஜ.க. ஏற்றுகொள்ளும். ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் அதிக தொகு திகளைக் கைப்பற்ற வேண்டும் என பா.ஜ.க. திட்டமிட்டிருப்பதை எடியூரப்பா நன்றாகவே உணர்ந்து கணக்குகளை தீட்டி இருக்கிறார்.
பா.ஜ.க.வில் இருந்து விலகி கடந்த ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி கர்நாடக ஜனதா கட்சியை' எடியூரப்பா தொடங்கினார். அதனைத்தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 6 இடங்களை கைப்பற்றினார். எடியூரப்பாவின் பிரிவால், கர்நாடகத்தில் எதிர்க்கட்சி அந்தஸ் தைக்கூட பா.ஜ.க.வால் பெற முடியாமல் போனது.
புதிய கட்சி தொடங்கிய ஒரு வருடம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதற்காக எடியூரப்பா எந்த சிறப்பு மாநாட்டிற்கும் இதுவரை ஏற்பாடு செய்யவில்லை. ஒருவேளை தனது கோரிக்கைகளை பா.ஜ.க. தலைமை ஏற்றவுடன், அக்கட்சியில் இணைய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதன்காரணமாகவே பாஜகவில் சேருவதை தற்போதைக்கு அவர் தள்ளிவைத்திருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT