Published : 25 Jan 2017 12:49 PM
Last Updated : 25 Jan 2017 12:49 PM
ஜல்லிக்கட்டு தொடர்பான புதிய சட்ட திருத்தத்துக்கு எதிராக இந்திய பிராணிகள் நல அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம் மனுக்களை வரும் 30-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வ தாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் மிருக வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு தமிழக சட்டசபை யில் புதிய சட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் மத்திய வனம் மற்றும் சுற்றச்சூழல் துறை பிறப்பித்த அறிவிக்கையை வாபஸ் பெறுவதாக அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பாக இந்திய பிராணிகள் நல அமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக் கறிஞர் அபிஷேக் மனு சிங்வி மற்றும் வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் ஆகியோர், தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டம் மிருக வதையை தடுக்கும் சட்டப் பிரிவுகளுக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டி வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி, ‘மத்திய அரசின் அறிவிக் கையை வாபஸ் பெறுவதற்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹின்டன் எப்.நாரிமன் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதே அமர்வு முன்பாக வரும் 30-ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவித்தார். தமிழக அரசு உள்ளிட்ட 70 பிரதிநிதிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ‘கேவியட்’ மனுக் களும் அப்போது கருத்தில் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:
ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்க்கும் வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராவது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை. எனவே, தற்போது எந்தத் கருத்தும் கூற விரும்பவில்லை. தமிழகத்தின் நலனை காங்கிரஸ் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன்:
அபிஷேக் மனு சிங்வியை பொறுத்தவரை அடிக்கடி செய்யக் கூடாததை செய்துவிட்டு சர்ச்சை யில் சிக்கிக் கொள்ளும் வழக்கம் உள்ளவர். வழக்கில் ஜல்லிக் கட்டுக்கு எதிரான அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராவது கடும் கண்டனத்துக்குரியது என்றார்.
மனு விவரம்:
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை எதிர்த்து இந்திய பிராணிகள் நல வாரியம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மிருக வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தமிழக அரசு கடந்த 23-ம் தேதி சட்டம் நிறைவேற்றியுள்ளது. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. ஏற்கெனவே வழங்கப் பட்ட தீர்ப்பை மாற்றும் வகையில் சந்தேகத்துக்குரிய வகையில் இச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடு பிடித்தல், மாட்டுப்பந்தயம், ஜல்லிக்கட்டு மற்றும் மாடுகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் வேறு எந்த நிகழ்வுகளும் கொடுமைப் படுத்தும் செயல் என்று இந்த நீதி மன்றம் கடந்த 12.1.2016ல் தீர்ப் பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிராகவும், இந்திய அரசியல மைப்பு மற்றும் மிருகவதை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளுக்கு எதிராகவும் தமிழக அரசின் சட்டம் உள்ளது. இச்சட்டப் பிரிவு 38-ன் கீழ் மத்திய அரசுக்கு மட்டுமே விதிகளை வகுக்க அதி காரம் உள்ளது. எனவே, தமிழக அரசு பிரிவு 3(2)ன் கீழ் விதிகளை வகுத்துள்ளது செல்லாது.
ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றும் வகையில் சட்டத்தை இயற்றுவது மோசடிக்கு சமம் என்று சில வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. காளை களுக்கு வழங்கப்பட்டிருந்த பாது காப்பை தமிழக அரசு புதிய சட்டத்தின் மூலம் மாற்றியுள்ளது. கண்டிப்பான விதிகள், கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், காளைகளை பயன்படுத்தும் நிகழ்ச்சிகள் கொடுமைப்படுத்தும் செயல்தான் என்று ஏற்கெனவே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் விதிமுறைகள் ஏற்கனவே நீதிமன்றத்தால் கண்டறியப்பட்ட குறைகளை தீர்க்கும் வகையில் இல்லை. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்துள்ளதன் மூலம், மிருக வதை தடுப்புச் சட்ட விதிகளுடன் முரண்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது. கலாச்சார மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கத்தின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இது அறுவடைத் திருவிழாவாக கொண்டாடப்படுவதால், இதற்கு மத ரீதியான எந்த தொடர்பும் இல்லை என்று ஏற்கெனவே தீர்ப் பளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு காளைகளை பாதுகாக்க நடத்தப் படும் நிகழ்வு என்ற காரணம் சட்டப்படி ஏற்புடையதல்ல.
ஒரு பிராணியை சண்டையிட தூண்டுவது சட்டப்பிரிவு 11(1) மற்றும் (என்) பிரிவுகளின் கீழ் குற்றம். எனவே, பல வழிகளில் மத்திய சட்டத்தை தமிழக சட்ட திருத்தம் மீறுகிறது. மேலும், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மாநில அரசின் கடமை. வன்முறையான ஜல்லிக்கட்டு நிகழ்வில் பயிற்சி பெறாத இளைஞர் கள், மக்கள் கூட்டத்தால் அச்சுறுத் தப்பட்ட காளைகளுடன் சண்டை யிட வற்புறுத்தப்படுகிறார்கள். எனவே, தமிழக அரசின் சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT