Published : 24 Jan 2014 12:00 AM
Last Updated : 24 Jan 2014 12:00 AM

மாநில அந்தஸ்து கோருவது மக்களை ஏமாற்றும் செயல்- புதுச்சேரி முதல்வருக்கு வைத்திலிங்கம் கண்டனம்

மக்களை ஏமாற்றவே முதல்வர் ரங்கசாமி மாநில அந்தஸ்து கோருகிறார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் புதுச்சேரியில் தனித்து நிற்க தயாராக உள்ளது என்று எதிர்க்கட்சித்தலைவர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கு அளிக்கப்பட்ட எதிர்க்கட்சித்தலைவர் அறையில் முதல்முறையாக செய்தி யாளர்களை வியாழக்கிழமை சந்தித்த வைத்திலிங்கம் கூறியதாவது:

கடந்தவாரம் ராகுல் காந்தியைச் சந்தித்தோம். புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெல்லும் என்று தெரிவித்தோம். பல்வேறு பிரச்சினைகளை திசை திருப்பவும், தங்கள் கட்சியில் உள்ள பூசலை மறைக்கவும், நிர்வாக சீர்கேட்டை மறைக்கவும் தனி மாநில அந்தஸ்து விஷயத்தை முதல்வர் ரங்கசாமி கிளப்பியுள்ளார்.மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் இக்கோரிக்கையை மத்திய அரசிடம் கொண்டு செல்ல கால அவகாசம் உள்ளதா என்பது அனைத்து மக்களுக்கும் தெரியும். மக்களை திசை திருப்பி ஏமாற்றவே மாநில அந்தஸ்து கேட்கிறார்.

புதுச்சேரியில் தற்போது நிதி பற்றாக்குறை இல்லை எனக்கூறிவிட்டு ரிசர்வ் வங்கியில் பத்திரங்களை வெளியிட்டு ரூ. 390 கோடி கடன் பெற்றுள்ளது ஏன் என்பதை முதல்வர் தெரிவிக்க வேண்டும்.

மக்களிடம் வாக்குகேட்க செல்ல விரும்பாமல் தனது கட்சியினர் மூலம் நீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை பெற்றார் முதல்வர். மக்களவைத் தேர்தலுக்கு அதுபோல் நீதிமன்றத்தை நாட முடியாது. அதற்காகத்தான் மாநில அந்தஸ்து என்ற விஷயத்தைத் திடீரென்று பேசத் தொடங்கியுள்ளார். இதற்காக அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டுவதையே எதிர்க்கிறோம்.

நான் முதல்வராக இருந்தபோது ஆளுநருடன் பிரச்சினை ஏற்பட்டது. உள்துறை அமைச்சகத்திடம் விவகாரத்தைக் கொண்டு சென்றேன். ஆளுநர்கள் நியாயமான கருத்துகள் தெரிவித்தால் அதை ஏற்க வேண்டும்.

என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சிக்கு வர உள்ளதாக கூறப்படுவது பற்றி எங்களுக்குத் தெரியாது. புதுச்சேரியில் காங்கிரஸ் தனித்து நிற்கத் தயாராக உள்ளது. புதுச்சேரியைப் பொறுத்தவரை வரும் மக்களவைத் தேர்தலானது என்.ஆர். காங்கிரஸின் ஆட்சி நிலையை வெளிப்படுத்தும் தேர்தலாகும் என்று தெரிவித்தார்.

பேட்டியின்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x