Published : 22 Mar 2014 12:27 PM
Last Updated : 22 Mar 2014 12:27 PM
நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக இடம் பெற செய்ய லஞ்சம் கேட்ட குற்றத்திற்காக உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஆம் ஆத்மி தலைவர்கள் இருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.
புது தில்லியில் செய்தியாளர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கேஜரிவால் அளித்த பேட்டியில், ” உத்தர பிரதேசத்தில் வேட்பாளர்களாக இடம்பெற சிலர் பணம் கேட்பதாக சீதாபூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் புகார் அளித்துள்ளர். இது தொடர்பாக தனியார் செய்தித் தொலைக்காட்சி சேனலின் நிருபர், இதன் தொடர்பான டெலிபோன் உரையாடலின் குரல் பதிவு அடங்கிய ஆவணத்தை அளித்திருந்தார். அவர் அளித்த பதிவில் குரல் தெளிவாக இல்லாததாலும் மேலும் உண்மையான ஆதாரமா? என்ற கேள்வி இருந்ததால் அவரிடம் தெளிவான ஆதாரத்தை அளிக்குமாறு கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதனை தொடர்ந்து அவர் மீண்டும் ஒரு குரல் பதிவு ஆதாரம் அளித்தார். அதில் உத்திர பிரதேச மாநில கட்சியின் ஆவாத் மண்டல அமைப்பாளர் அருணா சிங், ஹர்தோய் மண்டலத்தின் பொருளாளர் அசோக் குமார் ஆகியோர் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு லஞ்சம் கேட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அருணா சிங் மற்றும் அசோக் குமார் ஆகியோர் இருவரையும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதே போல ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. ராக்கி பிர்லாவுக்கு எதிராகவும் குற்றப்புகார்கள் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட புகார் உறுதி செய்யப்படவில்லை” என்றார் அரவிந்த் கெஜ்ரிவால்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT