Last Updated : 28 Mar, 2017 09:24 AM

 

Published : 28 Mar 2017 09:24 AM
Last Updated : 28 Mar 2017 09:24 AM

வெல்ல முடியாதவரா நரேந்திர மோடி?

அரசியல் வரலாற்றை பல்வேறு சகாப் தங்களாகப் பிரிக்க முடியும் என்றால் ‘இந்திரா காந்தியின் சகாப்தம்’ இந்திய தேசிய காங்கிரஸை இரண்டாக அவர் உடைத்த 1969-லிருந்து தொடங்கி, 1989-ல் ராஜீவ் காந்தி எதிர்க்கட்சி வரிசையில் போய் உட்கார்ந்த காலத்துடன் முடிவடைந்தது. அதற்கு முந்தைய மக்களவை பொதுத் தேர்தலில் கிடைத்த மிகப்பெரிய பெரும்பான்மை வலு (ராஜீவால்) வீணடிக்கப்பட்டது. அத்துடன் அப்போது வேகமாக வளர்ந்த இரண்டு பெரிய அரசியல் சக்திகள் அவரது வீழ்ச்சிக்கு வழிகோலின அவை ‘மந்திர்’, ‘மண்டல்’. அதற்குப் பிறகு 15 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் இருந்தாலும், இழந்த வேகத்தை முழுதாக மீட்க காங்கிரஸால் முடியவில்லை. நரசிம்ம ராவ் தலைமையில் ஐந்து ஆண்டுகளும் மன்மோகன் சிங்/ சோனியா காந்தி தலைமையில் பத்து ஆண்டுகளும் காங்கிரஸ் ஆட்சியிலிருந்திருக்கிறது. ஆனால் உண்மையான அதிகாரத்தை மந்திர், மண்டல் சக்திகள் மாறி மாறி வெவ்வேறு கட்டங்களில் பகிர்ந்து கொண்டன.

1989-க்குப் பிறகு நிலவிய அரசியல் காட்சிகள், உத்தரபிரதேச சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் பாஜக கூட்டணி 325 இடங்களைப் பெற்று யோகி ஆதித்யநாத் முதலமைச்சராகப் பதவியேற்ற கையோடு முடிவுக்கு வந்துவிட்டன. இப்போதைய மாற்றம், அடிப்படையிலேயே நிகழ்ந்திருக்கிறது. இந்திய அரசியலில் புதிய விதிகளை உள்ளே புகுத்திய இம்மாற்றம், பழைய விதிகளைத் தூக்கி எறிந்திருக்கிறது. தீவிர இடதுசாரிகள் கூட கல்யாண் சிங் அல்லது ராஜ்நாத் சிங் முதல்வராக வந்திருந்தால் சற்றே நிம்மதி அடைந்திருப்பார்கள்! பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் ஒன்றையோ இரண்டையோ முஸ்லிம்களுடன் சேர்த்து ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற பழைய கணக்கு இனி எடுபடாது. மோடி-அமித் ஷா ஜோடியின் தேர்தல் இயந்திரம் அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டது. ராமர் கோயில் விவகாரத்துக்கு அரசியல் ரீதியாக இனி எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. இதனால் தான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி வழக்கு மூலமாக அல்லாமல், சமரசமாக பேசித் தீர்த்துக்கொள்ள வழிகாணுமாறு கூறியிருக்கிறார்.

சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் மூன்றும் 50% வாக்குகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டன, பாஜக 39.7% வாக்குகளைப் பெற்றது. முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக பாஜகவுக்கு எதிராக வாக்களிக்காமல் இது சாத்தியமல்ல. இந்துக்களில் நடுத்தர குடும்பத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல் இனத்தவர்கள் தங்களுடைய பழைய அரசியல் அணியிலிருந்து விலகி பாஜகவை நோக்கி நகர்ந்துள்ளனர்.

2014-ல் மோடிக்குக் கிடைத்த வெற்றி, அதற்கு முன்னால் வாஜ்பாய்-அத்வானி அடைந்த வெற்றியைப் போன்றதல்ல. சிறுபான்மைச் சமூகங் கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆகியவற்றின் பிரதிநிதியான ‘மதச்சார்பற்ற சக்திகள்’ ஒரு புறமும், பெரும்பான்மைச் சமூகத்துக்கு பாதுகாப்பில்லை என்று அச்சமூட்டிக்கொண்டிருந்த பாஜக எதிர்ப்புறமும் இருந்தன. இப்போது இந்து வாக்குவங்கி, தனக்குப் பாதுகாப்பில்லை என்ற அச்ச உணர்வு நீங்கி, புதிய நம்பிக்கையோடு புத்துணர்வோடு அணிவகுத்து நிற்கிறது.

இது என்னவென்று விளக்குகிறேன். மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருந் தாலும் சிறுபான்மைச் சமூகத்தைப் போன்ற அச்ச உணர்வில் இந்துக்கள் இருக்கின்றனர். இந்துக்களின் அச்சம், புகார்களின் மீது அத்வானி யும் ஆர்எஸ்எஸ்ஸும் தங்களுடைய பிரச்சாரங் களைக் கட்டமைக்கின்றனர். காங்கிரஸின் மதச்சார் பின்மைக் கொள்கையில் முஸ்லிம்களும் கிறிஸ் தவர்களும்தான் கவனிப்பைப் பெறுகின்றனர். ஹஜ் பயணத்துக்கு விமானக் கட்டண மானியம், மத்திய அமைச்சர்கள் இஃப்தாருக்கு மட்டும் பெரும் செலவில் விருந்து ஏற்பாடுகள், கல்வி பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து சிறுபான்மைச் சமூக கல்வி நிலையங்களுக்கு மட்டும் விதிவிலக்குகள், அதிகரித்துவரும் பாகிஸ்தானிய பயங்கரவாதம், அனைத்திலும் இஸ்லாமிய மயம் என்று பல்வேறு அம்சங்களைச் சுட்டிக்காட்டிப் பிரச்சாரம் செய்தனர். இவையெல்லாம் ஒரு சேர நம்பப்பட்டபோது 1998 முதல் 2004 வரையில் பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்தது. அப்போதும் மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு பாஜகவை எதிர்த்தன. பெரும்பான்மைச் சமூகத்துக்கு ஏற்பட்ட பாதுகாப்பற்ற உணர்வைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்புகளுக்கு வரம்பு இருந்தது.

2004-ல், ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற கோஷத்தை முன்னிறுத்தி வாஜ்பாயும் அத்வானி யும் வாக்கு சேகரித்தனர். அவர்கள் அப்படியே நம்பினாலும் இந்துக்களின் அச்ச உணர்வையும், சிறுபான்மைச் சமூகத்துக்கு எதிரான உணர்வை யும் பயன்படுத்திக்கொள்ள முனைந்தது நகை முரணாகியது. பொருளாதாரம் வளர்ந்துவிட்டது என்று நம்பிய ஏழை இந்து வாக்காளர்கள் மீண்டும் தங்களுடைய சாதிக் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஐந்தாண்டு ஆட்சி நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தைக் கூட்டி ‘பொடா’ சட்டத்தை ரத்து செய்தது இதன் அடையாளம். அதே வளர்ச்சி, வாய்ப்புகள் என்ற நம்பிக்கைதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மீண்டுமொரு முறை ஆட்சி செய்ய ஆதரவை வழங்கியது.

புதுடெல்லிக்கு வெகு தொலைவில் ஆமதாபாத் திலிருந்து கொண்டு இதையெல்லாம் பார்த்த நரேந்திர மோடி, சிறுபான்மையினத்தவரைக் காட்டி பெரும்பான்மைச் சமூகத்துக்கு அச்சமூட்டி வாக்குகளைக் கவரும் உத்தி இனி பலனளிக்காது என்ற முடிவுக்கு வந்தார். பயங்கரவாதத்தைத் தன்னுடைய போக்கில் எதிர்கொள்ள அவர் தயாரானார். ‘பொடா’ சட்டம் இல்லாவிட்டால் என்ன, ‘என்கவுன்டர்’ இருக்கிறதே என்று அதைக் கடைப்பிடித்தார். 2007 தொடங்கி மோடி பேசிய ஒவ்வொன்றும், செய்த ஒவ்வொன்றும் இந்துக்களின் குறைகளை இந்துக்களின் எழுச்சியாக மாற்றியது. அவர் சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எதிராகக் கடுமையாக எதையும் செய்யவில்லை. அதே சமயம் நடந்தவற்றுக்கு அவர் மன்னிப்பும் கேட்கவில்லை. அதனால்தான், ஒரு மவுல்வி இஸ்லாமிய தொப்பியை அணிந்து கொள்ளத் தந்தபோது அதை மறுத்தது, பிரதமரின் இல்லத்தில் ஆண்டுதோறும் நடந்துவந்த இஃப்தார் விருந்தை ரத்து செய்தது, அமைச்சரவையில் கிறிஸ்தவ, முஸ்லிம் சமூகத்தவரைச் சேர்க்காமல் இருந்தது, உத்தரபிரதேசத்தில் நிறுத்திய 403 வேட்பாளர்களில் ஒருவர்கூட முஸ்லிமாக இல்லாமல் பார்த்துக் கொண்டது என்று திட்டமிட்டு நடந்துகொண்டார்.

மோடி-ஷா கூட்டணி மதச்சார்பின்மைக்குப் புதிய விளக்கத்தை அளித்திருக்கிறது. புதிய அரசியல் சூழலில் தங்களுடைய இடம் எது என்பதை முஸ்லிம்கள் தெரிந்துகொண்டால், அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். இந்தியாவை யார் ஆள வேண்டும், யார் ஆளக்கூடாது என்ற ரத்து அதிகாரம் (VETO) இனி முஸ்லிம்களுக்குக் கிடைக்காது. இந்துப் பெரும்பான்மை இப்போது வென்றிருக்கிறது. இஸ்லாமியத் தொப்பியை அணிந்து முஸ்லிம்களை மகிழ்விக்க மறுத்ததற்கு சமமானதுதான் இந்து மதத் துறவியை நாட்டின் பெரியதொரு மாநிலத்துக்கு முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்ததும்.

எந்த எதிர்க் கட்சியும் அதிலும் குறிப்பாக காங்கிரஸ் இதை எதிர்த்து பழைய கோஷங்களைப் போடவும் முடியாது, மதச்சார்பின்மை என்றால் முஸ்லிம்களை அரவணைப்பதுதான் என்ற சிந்தனை தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை மதச்சார்பின்மை என்றால் காங்கிரஸ் பாணிதான் என்று இருந்தது.

தேசியவாதம் என்ற கொள்கையை நோக்கி மிகத் திறமையாக விவாதத்தை நகர்த்தியிருக்கிறார் மோடி. ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக அதி தீவிர இடதுசாரி சுதந்திரச் சிந்தனையாளர்கள் இதில் அவருக்கு உதவியிருக்கிறார்கள். இந்த உண்மையை ஏற்று, மோடியின் தேசியவாதத்தை உரிய மாற்று தேசியவாதக் கருத்துகளோடு எதிர்கொள்கிற தலைவரை எதிர்க்கட்சிகள் தயார் செய்யும்வரை, வெல்ல முடியாதவராகத்தான் இருப்பார் மோடி.

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர். தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஜூரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x