Published : 30 Jan 2014 12:00 AM
Last Updated : 30 Jan 2014 12:00 AM
வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மைசூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக கர்நாடக மாநில காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கடந்த முறை உத்தரப் பிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வென்ற ராகுல் காந்தி, இம்முறையும் அதே தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்பட்டது. அந்த தொகுதியில் ராகுலை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகர் குமார் விஸ்வாஸ் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டது. ராகுலை வீழ்த்த பா.ஜ.க. தரப்பிலும் வியூகங்கள் வகுக்கப்பட்டன.
மைசூரில் கள ஆய்வு
இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் போட்டியிட மாட்டார். கர்நாடகத்தில் உள்ள மைசூர் தொகுதியிலோ, சிக்மகளூர் தொகுதியிலோ போட்டியிட திட்டமிட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெங்களூர் வந்திருந்த ராகுல் காந்தி, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவிடமும், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி.பரமேஸ்வரிடமும் ஆலோசனை செய்தார்.
மைசூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கும் மறைந்த மைசூர் மகாராஜா கண்டதத்த உடையாரின் மனைவி பிரமோத தேவியை சந்தித்து ராகுல் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் மைசூரில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும்படி ராகுல் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ராகுல் காந்தியின் அரசியல் ஆய்வுக் குழு, மைசூர் மற்றும் சிக்மகளூர் தொகுதிகளுக்குச் சென்று வெற்றி வாய்ப்பு குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர். பெங்களூரைச் சேர்ந்த தனியார் ஆய்வு நிறுவனங்கள் நடத்திய ஆய்வு முடிவுகளையும் அலசி ஆராய்ந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
மைசூரில் ராகுல் போட்டியிடு வது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அந்த தொகுதியில் தேர்தல் பணிகளை இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் இப்போதே தொடங்கி விட்டனர்.
பாட்டி, அம்மாவைத் தொடர்ந்து பேரன்…
ராகுல் காந்தியின் பார்வை திடீரென கர்நாடகத்தின் பக்கம் திரும்ப என்ன காரணம் என கர்நாடக காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். இது தொடர்பாக பேசிய அக்கட்சியினர், “நேரு குடும்பத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நெருக்கமான உறவு இருந்து வருகிறது. 1977-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தோல்வி அடைந்தார்.
அதனைத் தொடர்ந்து 1978-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் சிக்மகளூர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1999-ம் ஆண்டு கர்நாடகத்தின் பெல்லாரி தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு சோனியா காந்தி வெற்றி பெற்றார். இதனால் கர்நாடக மாநில மக்களின் மீது சோனியா காந்தியின் குடும்பத்திற்கு அதீத அன்பும், மரியாதையும் உள்ளது.
அந்த வகையில் தற்போது ராகுல் காந்தியின் பார்வை கர்நாடகத்தின் பக்கம் திரும்பியுள்ளது. எனவே அவர் பெயரில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்” என்றனர்.
அமோக வெற்றி கிடைக்கும்
ராகுல் போட்டியிடுவது தொடர் பாக முதல்வர் சித்தராமையாவிடம் கேட்டபோது, “ராகுல் காந்தி கர்நாடகத்தில் போட்டியிட்டால் அமோகமாக வெற்றி பெறுவார். அவரை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார். தற்போதைய மைசூர் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. அடகூரு விஸ்வநாதன் கூறுகையில், “இந்த தொகுதியில் ராகுல் போட்டியிட்டால், அவரது வெற்றிக்காக அயராது பாடுபடத் தயாராக இருக்கிறோம்” என்றார்.
சதானந்த கவுடா சவால்
இந்நிலையில், பா.ஜ.க.வின் முக்கிய தலைவரும், முன்னாள் முதல்வருமான சதானந்த கவுடா கூறுகையில், “ராகுல் காந்தி மைசூர், உடுப்பி, சிக்மகளூர் உள்ளிட்ட எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து போட்டியிடுவேன். நாடு முழுவதும் காங்கிரஸுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். அதனால் எனது வெற்றி உறுதி” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT