Published : 10 Oct 2014 10:59 AM
Last Updated : 10 Oct 2014 10:59 AM
பிரதமர் நரேந்திர மோடியால் புற்றுநோய், நீரிழிவு நோய்க ளுக்கான மருந்துகளின் விலை உயர்ந்துள்ளது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ஹரியாணா சட்டசபை தேர்தலை முன்னிட்டு பெரோஸ்பூர் ஜகீர்ஹா நகரில் நேற்று நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக் காவுக்குச் செல்வதற்கு முன்பாக அந்த நாட்டைச் சேர்ந்த சில மருந்து உற்பத்தி நிறுவனங்களை மகிழ்ச்சிபடுத்த சலுகைகளை அளித்துள்ளார். இதனால் புற்று நோய் மருந்துகளின் விலை ரூ.8000-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்ந் துள்ளது. இதேபோல் நீரிழிவு நோய்க்கான மருந்துகளின் விலை யும் கணிசமாக அதிகரித்துள்ளது.
குறிப்பிட்ட சில தொழில திபர்களின் நலன்களுக்காக மட்டுமே மோடி பாடுபடுகிறார். வெகு விரைவில் தொழிலதிபர்களுக்காக மட்டுமே அரசு இயங்கும் நிலை உருவாகக்கூடும்.
கடந்த 60 ஆண்டுகளாக காங் கிரஸ் அரசு எதுவுமே செய்ய வில்லை என்று மோடி குற்றம் சாட்டி வருகிறார். இந்த நாடு தனிமனித உழைப்பில் உருவானது அல்ல. கோடிக்கணக்கான மக்களின் உழைப்பில், வியர்வையில் உருவானது.
கடந்த 60 ஆண்டுகளாக நாடு முன்னேறவே இல்லை என்று மோடி கூறுவது விவசாயிகள், தொழி லாளர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு ஆகும். நாட்டை முன்னேற்ற அயராது பாடுபட்டு வரும் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் மோடி பேசி வருகிறார்.
ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தனிநபருக்கு அளிப்பதை காங்கிரஸ் ஆதரிக்கவில்லை. விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப் பினருக்கும் அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். அதுதான் உண்மையான அரசியல். அதை காங்கிரஸ் உறுதியாகப் பின்பற்றுகிறது. கடந்த ஆட்சியில் நிலம் கையகப்படுத்தும் சட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அமல்படுத்தப் பட்டன. அவற்றை இப்போதைய பாஜக அரசு நீர்த்துச் போகச் செய் கிறது.
மக்களவைத் தேர்தலின்போது பாஜக ஆட்சிக்கு வந்தால் பாகிஸ் தான், சீனாவுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என்று அந்த கட்சித் தலைவர்கள் ஆவேசமாகப் பேசினர். அண்மையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதே நேரத்தில் காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்தது.
தற்போது காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி குண்டுகளை வீசி வருகிறது. இதில் சிலர் உயிரிழந்துள்ளனர். தேர்தல் நேரத்தில் ஆவேசமாக பேசிய பாஜக தலைவர்கள் இப்போது மவுனம் காப்பது ஏன்?
ஹரியாணாவில் இந்திய தேசிய லோக் தளம் ஆட்சியில் இருந்த போது தீவிரவாதம் தலை தூக்கியது. அரசு வேலைகள் பணத் துக்காக விற்கப்பட்டன. இப்போது காங்கிரஸ் ஆட்சியில் ஹரி யாணா பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளது. ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி, பால் உற்பத்தியில் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. எய்ம்ஸ், ஐ.ஐ.எம்., ஐஐடி, ராஜீவ் காந்தி கல்வி நகரம், பாதுகாப்புத் துறை பல்கலைக்கழகம் என ஹரியாணா மாநிலம் கல்வி கேந்திரமாக உருவாகியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
ரேவரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும் ராகுல் காந்தி பங்கேற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT