Last Updated : 22 Oct, 2014 02:10 PM

 

Published : 22 Oct 2014 02:10 PM
Last Updated : 22 Oct 2014 02:10 PM

அருண் ஜேட்லியின் கருப்புப் பண விவகாரப் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்

கருப்புப் பணப் பட்டியலில் உள்ள பெயர்களை வெளியிட்டால் காங்கிரஸ் கட்சிக்குத் தலைகுனிவு ஏற்படும் என்று அருண் ஜேட்லி கூறியதற்கு காங்கிரஸார் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கியுள்ளோரின் பெயர்ப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும், அப்போது காங்கிரஸ் தலைகுனிய நேரிடும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

கருப்புப் பண பட்டியலை வெளியிடாதது ஏன் என்று காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்தப் பட்டியல் விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதன்மூலம் பொதுமக்களுக்கும் பட்டியலில் உள்ளவர்களின் பெயர்கள் தெரியவரும். பாஜகவை பொறுத்தவரை எங்கள் தலைவர்கள் யாரும் சுவிஸ் வங்கியில் கருப்புப் பணத்தை முதலீடு செய்யவில்லை. ஆனால் மக்கள் மன்றத்தில் பட்டியல் வெளியாகும்போது அதில் உள்ள சில பெயர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தலைகுனிவை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியினர், அருண் ஜேட்லி இப்படி கூறி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார் என்று ட்விட்டரில் விளாசியுள்ளனர்.

இளையோர் காங்கிரஸ் தலைவர் ராஜிவ் சதவா என்பவர் ட்விட்டரில் கூறும்போது, “தேசத் துரோகி என்பவர் தேசத் துரோகிதான், அவர்கள் காங்கிரசாரும் கிடையாது பாஜக-வும் கிடையாது. எனவே அருண் ஜேட்லியை தடுத்து நிறுத்துவது எது?” என்று கேட்டுள்ளார்.

திக்விஜய் சிங் தனது ட்விட்டரில், “நிதியமைச்சர் இப்படிக் கூறி மக்களை ஏமாற்றுவதை விடுத்து தேர்தல் பிரச்சாரத்தின் போது கருப்பு பணத்தை மீட்டு நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.3 லட்சம் சேர்ப்பேன் என்று மோடி கூறியதை செயல்படுத்துவது எப்போது என்பதைத் தெரிவிக்கவும்” என்ற அவர் மேலும் தனது ட்விட்டர் தொடர்ச்சியில், “அந்த ரூ.3 லட்சம் ஜன் தன் யோஜானாத் திட்டத்தின் கீழ் தீபாவளி பரிசாகக் கிடைக்குமா? அல்லது நாங்கள் 2019ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டுமா?” என்று கேலி பேசியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x