Published : 25 Mar 2014 10:02 PM
Last Updated : 25 Mar 2014 10:02 PM
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்தர் மோடியை எதிர்த்து, மதுசூதன் மிஸ்திரியை நிறுத்தியுள்ளது காங்கிரஸ்.
காங்கிரஸ் இன்று (செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்ட மக்களவை தேர்தலுக்கான 7-வது பட்டியலில் தமிழகத்தின் நால்வர் உட்பட 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அகில இந்திய காங்கிரசின் தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவரான மதுசூதன் மிஸ்திரி, குஜராத்தின் வதோதராவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வதோதராவுடன் சேர்த்து உ.பி.யின் வாரணாசியிலும் போட்டியிடும் மோடியை எதிர்த்து காங்கிரஸ் அறிவித்துள்ள முதல் வேட்பாளர் இவர்.
குஜராத்தின் மற்றொரு தொகுதியாக கிழக்கு அகமதாபாத்தில் ஹிம்மத்சிங் பட்டேல் அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கு பாஜக சார்பில் பாலிவுட் நடிகரான பரேஷ் ராவல் போட்டியிடுகிறார்.
மகாராட்டிராவின் ஒரே வேட்பாளராக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அசோக் சவான் பெயர் பட்டியலில் உள்ளது. அம்மாநிலத்தின் நானட் தொகுதியில் போட்டியிடும் இவர், மகாராட்டிராவின் ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் சிக்கியவர்.
பஞ்சாபின் லூதியானாவின் எம்பியும் மத்திய அமைச்சருமான மணிஷ் திவாரியின் தொகுதியில், ரனவீத்சிங் பிட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த மாநிலத்தில் மேலும் இரு தொகுதிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மீதம் உள்ள ஆறு தொகுதிகளில் நான்கிற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், தமிழக இளைஞர் காங்கிரஸ் பிரமுகரான ஜோதிமணி, கரூரில் போட்டியிடுகிறார். இவர், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மதிப்பு வைத்துள்ள தமிழக காங்கிரஸாரில் குறிப்பிடத்தக்கவர்.
தமிழக காங்கிரசின் துணைத் தலைவரும், வர்த்தக பிரிவின் தலைவருமான தொழிலதிபர் ஹெச்.வசந்தகுமார், கன்னியாகுமரியில் போட்டியிடுகிறார். இவர் காங்கிரசின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
மற்றொரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான டாக்டர்.செல்லகுமார், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழக இளைஞர் காங்கிரசின் முன்னாள் தலைவரான இவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்களில் ஒருவர்.
வட சென்னையில், துறைமுக பொறுப்புகழக உறுப்பினரும், முன்னாள் தமிழக இளைஞர் காங்கிரசின் பொதுச் செயலாளருமான பிஜு சாக்கோ அறிவிக்கப்பட்டுள்ளார். இவர்கள் நால்வருமே, முதன்முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்திற்கு இன்னும் விழுப்புரம் மற்றும் தென் சென்னைக்கான வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது.
இந்த பட்டியலை, டெல்லியின் தலைமையகத்தில் மதுசூதன் மிஸ்திரியே வெளியிட்ட பட்டியலில், உபியிலும் இரண்டு வேட்பாளர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT