Last Updated : 20 Oct, 2014 02:08 PM

 

Published : 20 Oct 2014 02:08 PM
Last Updated : 20 Oct 2014 02:08 PM

மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியா பின்தங்கி உள்ளது: பிரதமர் மோடி

மருத்துவ ஆராய்ச்சித்துறையில் இந்தியா பின்தங்கியுள்ளது. இத்துறையில் பல்வேறு பணிகளை செய்ய வேண்டி யுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

டெல்லியில் அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: எய்ம்ஸ் போன்ற சிறந்த கல்வி நிறுவனத்தில் படித்த நீங்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள். உங்களின் படிப்பு இன்றோடு முடிந்துவிட்டது என்று நினைக்காதீர்கள். கற்றுக்கொள்வதும், அறிவை வளர்த்துக் கொள்வதும் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும்.

உங்களை மருத்துவர்களாக இந்த சமூகம் உருவாக்கியுள்ளது. அந்த சமூகத்தின் நலனுக்கு உங்களின் பங்களிப்பை செலுத்த வேண்டும். மருத்துவர்கள் ஆண்டுக்கு ஒரு வாரமாவது தொலைதூர கிராமங்களில் தங்கி ஏழை எளியோருக்காக பணிபுரிய வேண்டும்.

மருத்துவ ஆராய்ச்சித் துறையில் நாம் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒருவருக்கு ஏற்பட்ட நோய், அதற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, தீர்வு காண பயன்படுத்தப்பட்ட வழிமுறை உள்ளிட்டவற்றை பதிவு செய்து வைக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த மருத்துவப் பதிவுகள் நமக்கு பயனுள்ள பல தகவல்களை அளிக்கும்.

இத்தகைய செயல்பாடுகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்களில் (மருத்துவர்கள்) சிலர் ஆராய்ச்சியாளர்களாகவும் வாய்ப்பு உள்ளது.

மருத்துவ ஆராய்ச்சித் துறையில் இந்தியா பின்தங்கியுள்ளது. இத்துறையில் பல்வேறு பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

இனிவரும் காலங்களில், பட்டமளிப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினர்களை அழைப்பதில் புதிய பாரம்பரியத்தைத் தொடங்க வேண்டும். ஏதாவது ஒரு கிராமப் பள்ளியைச் சேர்ந்த 8 மாணவர்களை அழைத்து வந்து இந்த பட்டமளிப்பு விழாக்களில் விருந்தினர்களாக பங்கேற்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு உலகைப் பற்றிய விசாலமான பார்வை கிடைக்கும். மருத்துவர்களாகி சாதிக்க வேண்டும் என்ற கனவை அவர்களுக்குள் விதைக்க அது உதவும். இவ்வாறு மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x