Published : 18 Feb 2014 09:35 AM
Last Updated : 18 Feb 2014 09:35 AM
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அளித்துள்ள இடைக்கால பட்ஜெட், ஒரு வழியனுப்பும் பட்ஜெட் என்று பாரதிய ஜனதா கருத்து கூறியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர், நாடாளுமன்றத்துக்கு வெளியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நடைமுறையில் இது ஒரு பட்ஜெட் அல்ல. அனைத்து வகையிலும் தோற்றுப் போன ஓர் அரசின் ’வழியனுப்பும் பட்ஜெட்’. சிதம்பரம் தனது உரையில் அரசின் தோல்விகளை மறைக்கும் வகையில், உண்மையான புள்ளிவிவரங்களை உலகப் பொருளாதாரத்திற்கு உள்ளே மறைத்துள்ளார். விலைவாசி மற்றும் ஊழலுக்கு இடையே சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தகுந்த பதில் இல்லை. இவர்களிடம் தருவதற்கும் ஒன்றும் இல்லை” என்றார்.
மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முன்னாள் ராணுவத் தினருக்கான ‘ஒரே பதவி - ஒரே பென்ஷன்’ திட்டத்தை வரவேற்கிறோம். இத்திட்டத்தை மத்திய அரசு பல ஆண்டுகளாக நிறைவேற்றாமல் இருந்தது. தற்போது பாஜகவின் விருப்பத்தை தெரிந்த பின் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நம் நாட்டு உற்பத்தியாளர்களின் மோசமான நிலையை சுட்டிக் காட்டிய நிதியமைச்சர், அதற்கு தீர்க்கமான திட்டங்களுடன், அவற்றில் முதலீடுகளை அதிகரிக்கும் முயற்சிகளை காட்டவில்லை.
2011-ல் தனது தேசிய உற்பத்திக் கொள்கையை அறிவித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அடுத்து வந்த ஆண்டுகளில் அதை செயல்படுத்துவதில் மிகவும் குறைந்த ஆர்வமே காட்டியது.
லட்சக்கணக்கில் வேலை வாய்ப்பு அளிக்கும் உற்பத்தி மற்றும் வேளாண் துறைகள் துரதிருஷ்டவசமாக காலத்துக்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்படவில்லை. இந்த துறைகள் பற்றி இடைக்கால பட்ஜெட்டில் தெளிவான அறிவிப்பு இல்லை.
மத்தியில் அடுத்த அரசை பாஜக அமைத்து மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதுடன், பொருளா தார வீழ்ச்சியில் இருந்து நாட்டை காத்து முன்னேற்றத்தை ஏற்படுத்தும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT