Published : 07 Oct 2014 10:15 AM
Last Updated : 07 Oct 2014 10:15 AM
மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் குண்டு வெடித்தது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்க வேண்டும் என பாஜக கோரிக்கை வைத்துள்ளது. இந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை டிஐஜி (இயக்கம்) சிஐடி திலிப் அதக் கூறும்போது, “குண்டு வெடிப்பு தொடர்பாக, கார் துட்டப்பா கிராமத்தில் தனது வீட்டிலிருந்த ஹபீஸ் மொல்லா (எ) ஹசனை சிஐடி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்” என்றார்.
இதுதொடர்பான வழக்கில், 2 பெண்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. கக்ரஹாரில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 2ம் தேதி வெடிகுண்டு வெடித்ததில், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் ஷகீல் அஹமது மற்றும் சோவன் மண்டல் ஆகிய 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஹசன் சாஹிப் காயமடைந்தார். இதில் லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது.
இதுதொடர்பாக, கரிம்பூரைச் சேர்ந்த ரஜிரா பிபி (எ) ருமி, முர்ஷிதாபாதை அடுத்த லால்பாக்கைச் சேர்ந்த அமினா பிபி ஆகிய 2 பெண்களை சம்பவ தினத்தன்றே போலீஸார் கைது செய்தனர். இவர்களை 9 நாட்களுக்கு போலீஸ் காவலில் வைக்க உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து பர்த்வான் காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.எம்.எச்.மிர்சா கூறும்போது, கைது செய்யப்பட்ட ரஜிரா பிபி கொல்லப்பட்ட ஷகீல் அஹமதுவின் மனைவி. அமினா பிபி காயமடைந்த ஹசன் சாஹிபின் மனைவி ஆவார். மேலும் இதுதொடர்பாக மங்கல்கோட்டைச் சேர்ந்த அபுல் கலாம் என்பவரை தேடி வருகிறோம்” என்றார்.
என்ஐஏவிடம் ஒப்படைக்க வேண்டும்
இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் சித்தார்த் நாத் சிங் நேற்று கூறும்போது, “திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான அரசு, பர்த்வான் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்காதது ஏன்? இதுவிஷயத்தில் தாமதம் செய்வது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த வழக்கின் மீதான விசாரணையை மாநில அமைப்புகள் மேற்கொண்டால் நியாயமாக நடக்க வாய்ப்பு இல்லை. எனவே என்ஐஏவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT