Published : 06 Mar 2014 11:00 AM
Last Updated : 06 Mar 2014 11:00 AM

செய்தி வெளியிட பணம் கொடுப்பதை குற்றமாக அறிவிக்க வேண்டும்- தேர்தல் ஆணையம் யோசனை

பத்திரிகைகள், தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் செய்தி வெளியிட அரசியல்வாதிகள் பணம் கொடுப்பதை குற்றமாக அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை புதன்கிழமை வெளியிட்டு நிருபர்களிடம் பேசியபோது இதுபற்றி தலைமை தேர்தல் ஆணையர் வி,எஸ்.சம்பத் கூறியதாவது:

பணம் கொடுத்து செய்தி வெளியிடும் விவகாரத்தில் பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணைய தளங்கள் போன்ற மின்னணு ஊடக சாதனங்கள், வேட்பாளர்களின் செலவுகள் போன்ற மூன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பணம் கொடுத்து செய்திகளை வெளியிடுவதை கட்டுப்படுத்த சட்டம் இல்லை. எனவே

இத்தகைய செயலை தேர்தல் சம்பந்தப்பட்ட குற்றமாக அறிவிக்க வேண்டும் என சட்ட அமைச்சகத்துக்கு யோசனை தெரிவித்திருக்கிறோம்.

பணம் கொடுத்து செய்தி வெளியிடுவதை கட்டுக்குள் கொண்டுவர வேட்பாளர்கள் செய்யும் செலவுகளை தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கண்காணிக்கிறது. மாநில, மாவட்ட நிலையில் கண்காணிப்பு குழுக்கள் உள்ளன. வேட்பாளர் செய்யும் செலவுகள் அவரது செலவு கணக்கில் சேர்க்கப்படுகிறது.

பணம் கொடுத்து பத்திரிகைகளில் செய்தி வெளியிடச் செய்வதாக புகார் வந்தால் அது பற்றி விசாரிக்கும்படி இந்திய பத்திரிகை கவுன்சிலுக்கு பரிந்துரைக்கிறோம். மின்னணு ஊடகங்கள் சம்பந்தப்பட்டதாக இத்தகைய புகார்கள் வந்தால் அதை தேசிய ஒளிபரப்பாளர்கள் அமைப்புக்கு தெரியப்படுத்துகிறோம்

தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிப்பது பற்றி முடிவு செய்ய வேண்டியது நாடாளுமன்றம்தான். இப்போதைய நிலையில் அதை கட்டுப்படுத்த எங்களிடம் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்துகிறோம்.

கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என 2004லேயே தேர்தல் ஆணையம் யோசனை தெரிவித்தது.

ஆனால் வாக்குக் கணிப்புகளுக்கு (வாக்களித்து விட்டு வருவோரிடம் கேட்பது) மட்டுமே தடை விதிக்கப்பட்டது.

இப்போதுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு கருத்துக் கணிப்புகளை தேர்தல் ஆணையம் தடை செய்ய சட்டம் அனுமதிக்கிறது.

சட்டப் பேரவைகளுக்கும் மக்களவைக்கும் தேர்தல் நடக்கும்போது தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து இறுதிக் கட்ட வாக்குப் பதிவு முடியும் வரை கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடக்கூடாது என தடை விதிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் யோசனை. இது பற்றி கருத்து கூறும்படி அட்டார்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதியிடம் சட்டம் அமைச்சகம் கேட்டுள்ளது.

சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடப்பதுதான் முக்கியம் என்கிற தேர்தல் ஆணையத்தின் நிலை சரியானது. கருத்துக் கணிப்புகள் வாக்காளரின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது என்று வாகன்வதி தெரிவித்திருக்கிறார் என்றார் சம்பந்த்.

வேட்பாளர்கள் பொய் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது பற்றி கேட்டதற்கு, ‘இதுபற்றி சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மீது தேர்தல் அதிகாரியோ அல்லது குடிமகனோ புகார் தெரிவிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது’ என்றார் சம்பத்.

தான் கொடுக்கும் பிரமாணப் பத்திரத்தில் வேட்பாளர்கள் தகவலை தெரிவிக்காமல் மறைத்தாலோ பொய்யான விவரத்தை தெரிவித்தாலோ அவை நிரூபணமானால் அபராதம், 6 மாத சிறைத் தண்டனை வழங்க தற்போதைய சட்ட விதிகள் இடம் தருகிறது.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் போட்டியிடுவதை தடுக்க நிறைய தடுப்பு ஏற்பாடுகள் உள்ளன. தன் மீதுள்ள வழக்குகள் மற்றும் தண்டிக்கப்பட்ட விவரங்களை வேட்பாளர்கள் கொடுக்க வேண்டி உள்ளது.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் சட்டப்படி போட்டியிட அனுமதி இல்லை. கிரிமினல் குற்றம் புரிந்தவராக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர்களின் வேட்பு மனு நிராகரிக்கப்படும். இத்தகைய தீர்ப்புகள் பற்றிய தகவல்களை தேர்தல் ஆணையத்துக்கு அவ்வப்போது தெரிவிக்கும்படி மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறோம் என்றார் சம்பத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x