Published : 25 Mar 2014 12:00 AM
Last Updated : 25 Mar 2014 12:00 AM
ஆந்திர மாநிலத்தில் திருஷ்டி சுற்றிய எலுமிச்சம்பழம் பழத்தை தெரியாமல் விழுங்கியதால் 10 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது.
விசாகப்பட்டினம் மாவட்டம் காசிம் கோட்டா இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் கனகேஸ்வர் ராவ். ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வரலட்சுமி.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த இவர்களுக்கு ரோகன் சாய் எனும் 10 மாத ஆண் குழந்தை இருந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வரலட்சுமி, தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து தனது தாயார் வீட்டிற்கு குழந்தையுடன் சென்று விட்டார்.
இந்நிலையில் திங்கள் கிழமை குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் வரலட்சுமி, தனது குழந்தைக்கு எலுமிச்சம் பழத்தால் திருஷ்டி சுற்றி உள்ளார். பின்னர் அந்த எலுமிச்சம் பழத்தை குழந்தையின் அருகிலேயே மறந்து வைத்து விட்டார்.
தூங்கிக் கொண்டிருந்த அந்தக் குழந்தை சிறிது நேரத்தில் எழுந்துள்ளது.
அப்போது, அருகில் இருந்த எலுமிச்சம் பழத்தை விழுங்கி விட்டது. இதைக் கண்ட வரலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தார் உடனடியாகக் குழந்தையை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து கனகேஸ்வர் ராவ், தன்னுடைய குழந்தை இறந்ததற்கு, மாமனாரும் மாமியாருமே காரணம் என காசிம் கோட்டா போலீஸில் புகார் செய்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT