Published : 19 Feb 2014 06:26 PM
Last Updated : 19 Feb 2014 06:26 PM
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மின்சாரம் கட்டணம் கட்டுவது இல்லை என அறிவித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு, முந்தைய அரவிந்த் கேஜ்ரிவால் அரசு அறிவித்த மானியம் நிறுத்தி வைத்து, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது.
டெல்லியில் கடந்த முறை நிலவிய காங்கிரஸ் ஆட்சியில் அரவிந்த் கேஜ்ரிவால், மின்கட்டணக் குறைக்க கோரி, அதை செலுத்துவது இல்லை என கடந்த அக்டோபர் 2012 முதல் ஏப்ரல் 2013 வரை ஒரு 'சத்யாகிரகப் போராட்டம்' அறிவித்தார்.
இந்த நாட்களில் தங்கள் மின்கட்டணம் செலுத்தாத சுமார் 24,000 நுகர்வோர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. அரசு துண்டித்த இந்த மின் இணைப்புகளை கேஜ்ரிவாலே மின்கம்பத்தில் ஏறி மீண்டும் இணைத்தார்.
இந்நிலையில், டெல்லியில் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஆட்சி அமைத்து 49 நாட்களுக்கு முதல்வராக இருந்தார் கேஜ்ரிவால். அப்போது அவர், தமது போராட்டத்திற்கு ஆதரவளித்த காரணத்திற்காக அந்த நுகர்வோர் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றதுடன், மின்கட்டணத்தின் 50% சதகிதத்தை மானியமாக அளித்தார். இது அரசுக்கு சுமார் 6 கோடி ரூபாய் கூடுதல் செலவானது.
இதை எதிர்த்து வழக்கறிஞர் விவேக் சர்மா என்பவர் தொடுத்த பொதுநல வழக்கை டெல்லி உயர் நீதிமன்ற அமர்வின் தலைமை பொறுப்பு நீதிபதி பி.டி.அகமது மற்றும் நீதிபதி சித்தார்த் மிருதுள் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது, இந்த உத்தரவிற்கு அமைச்சரவை கூடி ஒப்புதல் அளித்ததா எனவும், இதில் பின்பற்றப்பட்ட அரசு நடைமுறைகளில் தெளிவில்லை எனவும் கூறினர்.
இதை விளக்கி குறுகிய நாட்களில் விளக்கம் அளிக்குமாறும், அதுவரை மின்சாரக் கட்டணத்தில் மானியம் அளிப்பதை நிறுத்தி வைக்கும்படியும் டெல்லி அரசிற்கு உத்தரவிட்டு, வழக்கை பிப்ரவரி 21 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT