Published : 14 Oct 2013 06:18 PM
Last Updated : 14 Oct 2013 06:18 PM
பைலின் புயலால் பெரும் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதற்கு, காங்கிரஸின் சிறப்பான செயல்பாடுகளே காரணம் என்று அக்கட்சி கூறியுள்ளது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, பைலின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், இந்திய வானிலை ஆய்வு மையம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் பல்வேறு அரசு துறைகள் மிகச் சிறப்பாக செயல்பட்டதாகக் குறிப்பிட்டார்.
“மிகத் தீவிரமான புயல், முன்கூட்டியே துல்லியமாகக் கணிக்கப்பட்டது. புயல் மையம் கொண்டது, கரையைக் கடப்பது உள்ளிட்ட அனைத்தும் மிகத் துல்லியமாக கணிக்கப்பட்டது. நம்முடைய கணிப்பின் காரணமாக, மிகச் சிறப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. பெரிய எண்ணிக்கையிலான மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இதற்கு, நம்மை நாமே பாராட்டிக்கொள்ளலாம்” என்றார் ஜெய்பால் ரெட்டி.
அப்போது, மத்திய அமைச்சகத்தின் செய்தியாளர்கள் கூட்டத்தை, அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தியாளர்கல் கூட்டத்தில் நடத்துவது ஏன்? புயலை கையாண்ட விதத்துக்கான பெருமையை காங்கிரஸ் எடுத்துக்கொள்கிறதா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு, “இந்தப் பெருமை ஏன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது? இந்த ஆட்சியில்தான் இந்திய வானிலை ஆய்வு மையத்தில் மிகப் பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது” என்றார் அவர்.
அப்படியென்றால், உத்தராகண்ட் பேரிடரில் ஏற்பட்ட தோல்விக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தோல்வியாக எடுத்துக்கொள்ளலாமா என்றதற்கு, “உத்தராகண்டில் பல திசைகளில் இருந்து பேரிடர் வந்தன. அது, மழையால் மட்டுமே வந்த பாதிப்பு இல்லை. சுற்றுச்சூழலும் வெள்ளப் பெருக்கத்துக்குக் காரணம்” என்றார் ஜெய்பால் ரெட்டி.
பைலின் புயலை சமாளித்ததில் ஒடிசா அரசின் பங்கு குறித்து கேட்டதற்கு, “நான் இந்த விஷயத்தை அரசியலாக்க விரும்பவில்லை. இந்திய வானிலை ஆய்வு மையம் மிகச் சிறப்பாக கணித்தது. தேசிய பேரிடர் மேலாணை ஆணையமும், ஒடிசா போன்ற மாநில அரசுகளும் தங்கள் கடமையைச் செய்தன. சுமார் 10 லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்” என்றார் அமைச்சர் ஜெய்பால் ரெட்டி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT